Published : 06 Sep 2023 02:49 PM
Last Updated : 06 Sep 2023 02:49 PM

தினம் தினம் மக்கள் அவதி - வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுமா?

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே ‘கேட்’ பகுதி.

வாணியம்பாடி: வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே ‘கேட்’ பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் அறிவிப்பு பல ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளதால் பொதுமக்கள் கடும் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நகரின் மையப்பகுதியாக நியூடவுன் பகுதி உள்ளது. (எல்.சி. 81) ரயில்வே ‘கேட்’ இப்பகுதியில் உள்ளது. இதன் வழியாக நியூடவுன், புறவழிச்சாலை, காவலூர், ஆலங்காயம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். அதேபோல், ரயில்வே கேட்டுக்கு அருகே வசிக்கும் மக்கள் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வர வேண்டுமென்றால் ரயில்வே கேட்டை கடந்து தான் வர வேண்டும்.

சென்னையில் இருந்து பெங்களூரு, சேலம், ஈரோடு மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் நியூடவுன் ரயில்வே ‘கேட்’ வழியாக செல்லும்போது, இங்குள்ள ரயில்வே ‘கேட்’ அவ்வப்போது மூடப்படுகிறது. தினசரி 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த வழித்தடத்தில் சென்று வருவதால் நியூடவுன் ரயில்வே ‘கேட்’ அடிக்கடி மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால், நியூடவுன் ரயில்வே கேட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதைத் தவிர்க்க நியூடவுன் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் மற்றும் மாநில அரசு சார்பில் நியூடவுன் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நியூடவுன் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்கப்பாதை அமைக்கவும், கோணாமேடு அருகே ரயில்வே தண்டவாளம் கீழே செல்லும் சிறிய சுரங்கப்பாதையை புனரமைத்து அவ் வழியாக போக்குவரத்தை திருப்பி விட நகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்தது.

இதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், ரயில்வே துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் நியூடவுன் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வுகளை நடத்தினர். அப்போது, நியூடவுன் பகுதியில் விரைவில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வு நடந்து முடிந்து 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கான எந்த முயற்சியும் நடைபெறவில்லை. இதனால், அரசு ஒதுக்கீடு செய்த ரூ.16 கோடி பணம் வீணாகியுள்ளதாகவும், நியூடவுன் ரயில்வே ‘கேட்’ அருகே மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலைமை தொடர்வதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நியூடவுன் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்காக சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளது. சுரங்கப்பாதை அமைக்க முதலில் இடம் கையகப்படுத்த வேண்டும். அப்பகுதியில் இடம் கையகப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. அப்படியே சுரங்கப்பாதை அமைக்க நேர்ந்தால் மழைக்காலங்களில் மழைநீர் அங்கு தேங்கும். இருப்பினும், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதுதவிர, கோணாமேடு பகுதியில் பயனற்றுக் கிடக்கும் சுரங்கப்பாதையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நியூடவுன் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.

வாணியம்பாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள நியூடவுன் சுரங்கப்பாதையோ அல்லது மேம்பாலமோ அமைக்கும் பணிகளை அதிகாரிகள் இனிமேலும் தாமதிக்காமல் விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x