Published : 06 Sep 2023 05:00 PM
Last Updated : 06 Sep 2023 05:00 PM
புதுச்சேரி: பாரதியார் ஓவியத்தால் உருவாக்கப்பட்டு, தானே புயலால் சேதமடைந்த பாரத மாதா சிலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. டெரகோட்டாவில் வடிவமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட அந்த சிலை புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் திறக்கப்பட்டது.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட பாரத மாதா சிலையை துணை நிலை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்தார். முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார். எம்எல்ஏ அனிபால் கென்னடி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, வேளாண் செயலர் குமார், இயக்குநர் பால காந்தி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். சிலையை முனுசாமி வடிவமைத் திருந்தார்.
சிலையை திறந்து வைத்த பின்பு செய்தியாளர்களிடம் துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது: "தாவரவியல் பூங்காவில் இருந்த, இந்த சிலை தானே புயலில் சேதமடைந்தது. புதுச்சேரிக்கு ஆளுநராக வந்தபோது நான் இதைப் பார்த்தேன். சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமியிடம், பாரத மாதா சிலையை உருவாக்குமாறு கூறினேன். தற்போது ஜி 20 மாநாட்டை பாரத தேசம் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் போது புதுச்சேரியில் பாரத மாதா சிலை நிறுவப்பட்டுள்ளது.
எல்லா விதத்திலும் புதுச்சேரி வளர்ச்சி அடைய நாம் பாடுபடுவோம் என்று பாரத மாதா சிலை முன்பு சபதமேற்போம். ஜி 20 மாநாட்டுக்கு சுடு மண் சிற்ப கலைஞர் முனுசாமி அழைக்கப் பட்டுள்ளார். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். எந்த நாட்டிலும் கலைஞர்களுக்கு இவ்வளவு கவுரவம் வழங்கப்படவில்லை.
மேலும், பாரத மாதா சிலை வரலாறு தொடர்பாக வேளாண்துறையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பாரத அன்னை சிலையை உருவாக்க வ.வே.சு. அய்யருடன், பாரதியார் கலந்து ஆலோசித்தார். தலையில் தங்க கிரீடமும், இருபுறமும் விரிந்த இமயப் பருவதமும், சிந்து, கங்கை ஆறுகள் இரு மருங்கிலும் அமைய இலங்கை நாடு தாமரை மலராக நிற்கட்டும் என்று பாரத நிலப் பரப்பை உள்ளடக்கி பாரத மாதா சிலையை உருவாக்க விரும்பினார். அப்போதைய பிரெஞ்சு கல்லூரி ஓவிய ஆசிரியர் பெத்ரீஸ், பாரத மாதா சிலையை உருவாக்கினார்.
அது பாரதியாருக்கு திருப்தி தரவில்லை. அவர் சொன்ன திருத்தங்களை செய்து வரைந்து கொடுத்தார். பாரதியின் அன்பர்கள் இந்த ஒவியத்தை குயவர்பாளையம் வைத்திய நாத பத்தரிடம் தந்து பாரத மாதா சிலை செய்து தர கேட்டனர். அங்கு செய்யப்பட்ட சிலை தோட்டக் கலை பூங்காவில் இருந்தது. கடந்த 2011ல் தானே புயலில் இச்சிலை சேதமடைந்தது. தற்போது மீண்டும் டெரகோட்டாவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT