Published : 06 Sep 2023 01:10 PM
Last Updated : 06 Sep 2023 01:10 PM
சென்னை: "தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும். சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் முழு வீச்சில் மேற்கொள்ளாதது ஏன்? என்பது தான் தெரியவில்லை" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவா எனப்படும் போதைப் பாக்குகளை சாப்பிட்டு வகுப்பறையில் போதையில் உறங்கிய மாணவனை கண்டித்த ஆசிரியர், அந்த மாணவனால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர் நாளில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியரைத் தாக்கிய மாணவர், போதைப் பாக்குகளையும், புகையிலையையும் மெல்லும் வழக்கத்துக்கு ஆளானவர் என்று கூறப்படுகிறது. அதனால் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளான அவர், சில நாட்களுக்குப் பிறகு நேற்று தான் பள்ளிக்கு திரும்பியதாகத் தெரிகிறது.தமது செயலுக்காக மன்னிப்பு கேட்ட போதிலும், வகுப்பறையிலேயே போதைப் பாக்குகளை மென்று மயக்கத்தில் உறங்கியிருக்கிறார். அவரை எழுப்பியதற்காகத் தான் ஆசிரியரை அவர் தாக்கியிருக்கிறார். மாவா தந்த போதையில் தாம் என்ன செய்கிறோம் என்பதைக் கூட அறியாமல் அந்த மாணவர் செயல்பட்டிருக்கிறார். இந்த மாணவர் ஓர் எடுத்துக்காட்டு தான். பெருமளவிலான மாணவர்கள் போதை என்ற புதைகுழியில் சிக்கி தங்களின் எதிர்காலத்தை புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாணவர்களின் வாழ்வில் 12-ம் வகுப்பு மிகவும் முக்கியமானது. அந்த வகுப்பில் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகளைத் தேடாமல், போதைப் பாக்குகளில் மாணவர்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்றால், அவை மாணவர்களின் வாழ்வில் எத்தகையக் கேட்டை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். மாவா உள்ளிட்ட அனைத்து போதைப் பாக்குகளும் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை தாராளமாக கிடைப்பது தான் மாணவர்களும், இளைஞர் சமுதாயமும் சீரழிவதற்கு காரணம் ஆகும்.
மாவா மற்றும் போதைப்பாக்கில் தொடங்கும் சீரழிவுப் பயணம் மது, கஞ்சா எனத் தொடருகிறது. வகுப்பறையில் ஆசிரியரைத் தாக்குவதில் தொடங்கும் குற்றச்செயல்கள், காவல்துறை அதிகாரியை தாக்கும் அளவுக்கு உச்சத்தை அடைகின்றன. சமூகம் சீரழிவதற்கு சட்டப்படி விற்கப்படும் மது உள்ளிட்ட போதைப் பொருட்களும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளும் தான் காரணம் ஆகும். இவற்றை ஒழிக்காமல் மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது.
தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும். சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் முழு வீச்சில் மேற்கொள்ளாதது ஏன்? என்பது தான் தெரியவில்லை. இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமான ஒழித்து தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்", என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT