Published : 06 Sep 2023 12:06 PM
Last Updated : 06 Sep 2023 12:06 PM

வேலூர் மாநகராட்சியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஒரு பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர் துரைமுருகன். அருகில், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், அமலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

காட்பாடி: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 660 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்து 600 மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

அப்போது, அவர் பேசும்போது, ‘‘கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காட்பாடி சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிட்ட போது, குடியாத்தம் வட்டத்திலிருந்து காட்பாடி தனி வட்டமாக உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி, காட்பாடி வட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பது பெருமையாக உள்ளது.

காட்பாடி தொகுதியில் பொன்னை பாலம், வேலூர் சர்க்கரை ஆலை, பாலாற்றில் இருந்து குடிநீர் மட்டுமின்றி காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் விரைவில் காட்பாடி பகுதியில் தொழிற்பேட்டை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தொழில் நுட்ப பூங்கா அமைக்கவும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாலாற்றில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்கும் வகையில், பல இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனடிப் படையில், வேலூர் மாவட் டத்துக்கு உட்பட்ட பொன்னை, குகையநல்லூர், காவனூர், தண்டல கிருஷ்ணாபுரம், இறைவன் காடு, அரும்பருதி உள்ளிட்ட இடங்களில் தரையில் இருந்து 5 அடி உயரத்துக்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அடுத்தாண்டு பருவமழை காலங்களில் தண்ணீர் வீணாகாமல் பாலாற்றில் தேக்கி வைத்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப்படும்.

திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சுமார் 40 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. அரசு அதிகாரிகள் மக்களுக்காக தான் பணி செய்கிறோம் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களை அன்புடன் வரவேற்று, அவர்களின் தேவையை நிவர்த்தி செய்வது தான் அரசு அதிகாரிகளின் கடமையாக இருக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தேவையான அத்தியா வசிய பணிகளில் சிறப்புடன் பணி யாற்றி வருகின்றனர். ஆனால், வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை.

மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களால் தான் இத்தகைய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப் பினர்கள் ஏ.பி.நந்த குமார் ( அணைக்கட்டு ) அமலு விஜயன் ( குடியாத்தம் ), மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x