Published : 06 Sep 2023 10:50 AM
Last Updated : 06 Sep 2023 10:50 AM

பவானி ஆற்றை பரிசலில் கடக்கும் மக்கள்: பாலம் கட்டித் தர கோரிக்கை

ஈரோடு: கோபி அருகே ஆபத்தான முறையில் பவானி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள், நடைபாலம் அமைத்துத் தர வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே அம்மாப்பாளையம், ராக்கிணாம்பாளையம், கணேசன்புதூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய அம்மாப்பாளையம் ஊராட்சி உள்ளது. இக்கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாத நிலையில், பவானி ஆற்றைக் கடந்து, அந்தியூர் - சத்தியமங்கலம் சாலையை அடைந்து, அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இல்லையெனில், எட்டு கிலோ மீட்டருக்கும் மேல் பயணித்து, மேவானி என்ற ஊரினை அடைந்து அங்கிருந்து பேருந்து மூலம் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியும். இதனால், நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பல்வேறு பணிகளுக்குச் செல்வோர், மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு வெளியூர் செல்வோர் பவானி ஆற்றை பரிசல் மூலம் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் பரிசலில் பயணிக்க வேண்டியுள்ளது. அதேபோல, அம்மாப்பாளையத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் இரு ஆசிரியர்களும், பரிசல் பயணம் மூலமே பள்ளிக்கு சென்று வர வேண்டிய நிலை தொடர்கிறது.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பவானி ஆற்றைக் கடக்க பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எம்எல்ஏ ஆய்வு: இந்நிலையில், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாணவர்களுடன் பரிசல் பயணம் மேற்கொண்ட அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பவானி ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்த அவர், விரைவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x