Last Updated : 08 Dec, 2017 09:11 AM

 

Published : 08 Dec 2017 09:11 AM
Last Updated : 08 Dec 2017 09:11 AM

மாயமான மீனவர்களை மீட்கக்கோரி குழித்துறையில் 8,000-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்: புயல் பாதித்த பகுதிகளில் ஆளுநர் ஆய்வு; ஆட்சியர், அரசு செயலர்களுடன் ஆலோசனை

ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்டோர் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருவனந்தபுரம் - நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. போராட்டம் இரவு 9 மணிக்குப் பிறகும் நீடித்தது.

ஒக்கி புயலில் சிக்கி குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி விட்டதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். மாயமான மீனவர்களைத் தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும். குஜராத், கோவா, லட்சத்தீவு, மகாராஷ்டிரா கடற்கரைகளில் ஒதுங்கிய மீனவர்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும். இறந்து கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மீனவர்கள் நேற்று காலை இப்போராட்டத்தை தொடங்கினர்.

போக்குவரத்து பாதிப்பு

இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நித்திரவிளை, புதுக்கடை, முஞ்சிறை வழியாகவும், நீரோடி, மார்த்தாண்டம்துறை, வள்ளவிளை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் களியக்காவிளை வழியாகவும் ஊர்வலமாக குழித்துறைக்கு வந்தனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்ததால் இப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரயில் மறியல்

குழித்துறை சந்திப்பில் காலை 11 மணி அளவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர். மற்றொரு பகுதியினர் பகல் 12 மணி அளவில் திடீரென குழித்துறை ரயில் நிலையத்துக்கு சென்று, தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். சாலை மறியல் செய்தவர்களும் அங்கிருந்து ரயில் நிலையம் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். பசுமை தமிழக அமைப்பின் தலைவர் சுப உதயகுமார், கிறிஸ்தவ ஆலய பங்குத் தந்தைகள் சின்னதுறை ராபின், வள்ளவிளை பெர்வின் பீட்டர், நீரோடி லோசியான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் நேற்று இரவு வரை ரத்து செய்யப்பட்டன. போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, தமிழக ஆளு நர் பன்வாரிலால் புரோஹித் கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், நேற்று காலை கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்களில் தரிசனம் செய்தார். பின்னர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

குளச்சலுக்கு சென்ற ஆளுநர், அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்தார். புயல் பாதிப்பு குறித்து குளச்சல் பங்குத் தந்தை எட்வின் வில்சன் விளக்கினார். புயலில் சிக்கி மாயமான குளச்சலை சேர்ந்த மீனவர் ஜான் டேவிட்சன் வீட்டுக்கு சென்று, ஆறுதல் கூறினார். பின்னர், சுசீந்திரத்தில் மழையால் சேதமடைந்த வீடுகள், விளைநிலங்களை பார்வையிட்டார். பின்னர், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு தனி படகு மூலம் சென்று, சிறிது நேரம் தியானம் செய்தார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மாலை 4 மணி முதல் ஒரு மணி நேரம் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செய லர் ஹன்ஸ்ராஜ் வர்மா, அரசு செயலர்கள், குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற னர்.

ஒக்கி புயல் வந்து 8 நாட்களைக் கடந்த பின்பும் மின் சீரமைப்பு, குடிநீர் விநியோகம் போன்றவை சகஜநிலைக்கு திரும்பாததற்கான காரணம், அவற்றை விரைந்து முடிக்கத் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மின் விநியோகத்துக்கான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

மாயமான மீனவர்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகும் நிலையில், கடற்கரை கிராமம் வாரியாக முறையான கணக்கெடுப்பு நடத்தி, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வலியுறுத்தினார். மீனவ குடும்பங்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

பயிர் சேதங்களை வேளாண் துறையினர் முறையாக கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்கும் வகையில் அறிக்கை அனுப்பவும், துண்டிக்கப்பட்ட சாலைகளை சரிசெய்து, போக்குவரத்தை சீரமைக்கவும், மலை கிராம மக்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்கவும் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர், 45 நிமிடம் பொதுமக்களிடம் இருந்து ஆளுநர் மனுக்களை வாங்கினார்.

பயணத்திட்டம் மாற்றம்

மாலை 5.20-க்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர், சென்னை செல்வதாக பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால், குழித்துறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியலால், கன்னியாகுமரிக்கு வர வேண்டிய பெங்களூரு ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில்தான் மாலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸாக சென்னைக்கு செல்லும். எனவே, ஆளுநரின் பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, மாலை 5.30 மணிக்கு அவர் மதுரைக்கு காரில் புறப்பட்டார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

பேச்சுவார்த்தை தோல்வி

இதன்பிறகு, இரவு 7 மணியளவில் போராட்டக் குழுவினருடன், குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணி நேரம் நீடித்த இப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அதன் பிறகும் இரவில் போராட்டம் நீடித்தது.

ஆளுநர் வருகையின் போது மீனவர்கள் ரயில் மறியல் நடத்தியதும், அவரது பயணத் திட்டம் மாற்றப்பட்டதும் பரபரப்பை ஏற் படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x