Published : 06 Sep 2023 04:37 AM
Last Updated : 06 Sep 2023 04:37 AM

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது சரியல்ல - தமிழக முதல்வர் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது என்பது அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது. தார்மீக அடிப்படையிலும் சரியானது அல்ல. சிறந்த ஆட்சிக்கும், நிர்வாக தூய்மைக்கும் இது உகந்தது அல்ல. எனவே, அமைச்சரவையில் அவர் நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைசட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர், மருத்துவமனையில் இதயஅறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது, புழல் சிறையில் அவர் மீண்டும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவை, சில மணி நேரங்களில் அவரே நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

தமிழக அரசின் அரசாணை மற்றும் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என்று அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோர் ‘கோ-வாரன்டோ’ மனுக்களை தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்து வந்தது. அப்போது நடந்த வாதம்:

ஜெயவர்தன் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இதற்கு முன்பு இதுபோன்ற வழக்கை நாடு சந்தித்தது இல்லை. எந்த இலாகாவும் வகிக்காத ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி முதல்முறையாக இப்படி வழக்கு
தொடரப்பட்டுள்ளது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சரவையில் தகுதியான நபர்கள் இடம்பெற வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரும் கூறியுள்ளார்.

எந்த வேலையும் செய்யாமல் சிறைக்குள் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு எதற்காக அமைச்சருக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி. இதன்மூலம் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது. செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என்று ஆளுநர் தெரிவித்த பிறகும், அவர் எப்படி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க முடியும். அவரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு உரிமை இல்லையா என்பதை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். இதில் உயர் நீதிமன்றமே தலையிட்டு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம்: அமைச்சரவையின் திருப்தி அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும். அதைத்தான் அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன. அமைச்சரவைக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அரசியல் சாசன சட்டம் அதிகாரம் வழங்கவில்லை. ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செயல்படுத்த முடியாது. தவிர, குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டாலே அன்றி, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தடையும் கிடையாது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ எந்த தடையும் விதிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அவர்கள் கூறியதாவது: அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரின் பணியும் முக்கியமானது. அமைச்சரவையின் தலைவராக செயல்படும் முதல்வர் அவர்களை வழிநடத்துகிறார். தமிழக முதல்வர் மீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் பதவியில் நீடித்து வருகிறார் என்ற மனுதாரர்களின் கவலை நியாயமானதுதான்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது என்பது அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, தார்மீக அடிப்படையிலும் சரியானது அல்ல. சிறந்த ஆட்சிக்கும், நிர்வாக தூய்மைக்கும் இது உகந்தது அல்ல. அமைச்சருக்கான எந்த பணியும் செய்யாத ஒருவர் அதற்கான சம்பளத்தை பெறுவதும் சரியல்ல. இலாகா இல்லாத அமைச்சராக அவர் பதவியில் நீடிப்பதால் எந்த பலனும் இல்லை.

சட்ட ரீதியாக தகுதி இழப்புக்கு ஆளாகாத அமைச்சரை ஆளுநர் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்ய முடியுமா என்பது விவாதத்துக்கு உரியது. ஆளுநரின் பரிந்துரையை முதல்வரும் ஏற்கவில்லை. இந்த வழக்குகளில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றாலும், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பதை தமிழக முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்குகிறோம். இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x