Published : 06 Sep 2023 05:56 AM
Last Updated : 06 Sep 2023 05:56 AM
சென்னை: மக்களுக்கு சுகாதார சேவைகள் முழுமையாகக் கிடைக்க ஆயுஷ் திட்டங்களை தென்மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.
மத்திய அரசின் ஆயுஷ் துறைசார்பில் தேசிய ஆயுஷ் திட்டத்தின்கீழ் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவுகள், புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் மண்டல ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசியதாவது:
தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் 2014-15 முதல் இதுவரை தென்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.719.70 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தென்மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றன. பழநியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டமைப்பை தமிழக ஆயுஷ் குழுவினர் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், விசாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை மற்றும் அரசு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் கட்டமைப்புப் பணிகளை ஆந்திர ஆயுஷ் குழுவினர் தொடங்க வேண்டும். மக்களுக்கு சுகாதார சேவைகள் முழுமையாகக் கிடைக்க ஆயுஷ் பொது சுகாதார திட்டங்களை தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவாலிடம் வழங்கினார்.
அந்த மனுவில், “தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் சித்த மருத்துவத்துக்காக ஓர் அனைத்து இந்தியசித்தா நிலையம் அமைக்க வேண்டும். மதுரை திருமங்கலத்தில் தற்போது செயல்பட்டு வரும் அரசினர் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை திருப்பரங்குன்றம் தாலுகாவில் புதுப்பட்டி கிராமத்தில் மறுநிர்மாணம் செய்யவும், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள அரசினர் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும், சென்னை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவத்தின் புற சிகிச்சை முறையான வர்மம்சிகிச்சை முறைக்கான சிறப்புமையம் அமைக்கவும் தேவைப்படும் நிதியுதவியை தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஆயுஷ் துறைஇணை அமைச்சர் முஞ்சபாரா மகேந்திரபாய், கர்நாடகா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டூராவ், மத்திய ஆயுஷ் துறை செயலாளர் ராஜேஷ் கோட்டச்சே, இணை செயலாளர் கவிதா கார்க்,தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT