Published : 06 Sep 2023 06:26 AM
Last Updated : 06 Sep 2023 06:26 AM
கும்பகோணம்: சுவாமிமலையில் இருந்து புதுடெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட 28 அடி உயர பிரம்மாண்ட நடராஜர் சிலை, ஜி-20 மாநாட்டு முகப்பில் நேற்று நிறுவப்பட்டது.
புதுடெல்லி பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட நடராஜர் சிலையை அமைக்க, மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் முடிவு செய்தது.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் உள்ள ஸ்ரீ தேவசேனாதிபதி சிற்பக்கூடத்துக்கு இதற்கான பணி வழங்கப்பட்டது. ஸ்தபதிகள் தே.ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீகண்டன்,தேவ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த சிலையை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
28 அடி உயரம், 21 அடி அகலம், 18 டன் எடையில் செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் ஆகிய 8உலோகங்களை கொண்ட அஷ்டதாதுக்களால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. இது தவிர 7 டன்எடையில் பீடம் தயாரிக்கப்பட்டது.
அதன்பின், புதுடெல்லி இந்திரா காந்தி தேசிய கலை மையத் தலைவர் ஆர்த்தல் பாண்டியா தலைமையில் அலுவலர்கள் ஜவகர் பிரசாத், மனோகர் தீட்சத் ஆகியோர் கடந்த மாதம் 25-ம் தேதி, சுவாமிமலை வந்து, நடராஜர் சிலையை ஸ்தபதிகளிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
பின்னர், இந்த சிலை கடந்த 28-ம் தேதி டெல்லி சென்றடைந்தது.
அதன்பின், இந்த சிலையைமெருகூட்டுதல், கண் திறப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ராதாகிருஷ்ணன் மற்றும்தேவ.சுவாமிநாதன் உள்ளிட்ட 20 ஸ்தபதிகள் கடந்த மாதம் 29-ம் தேதி விமானம் மூலம் டெல்லி சென்றனர். அங்கு அவர்கள் சிலைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணி மேற்கொண்டனர்.
இந்தப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜி-20 மாநாட்டு முகப்பில் நேற்று இந்த சிலை நிர்மாணிக்கப்பட்டது. இந்த சிலையின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் எனவும், உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை எனவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT