Published : 06 Sep 2023 03:46 AM
Last Updated : 06 Sep 2023 03:46 AM

சந்திரயானை தொடர்ந்து ஆதித்யா விண்கலத்திலும் சேலம் இரும்பாலையின் ஸ்டீல் பயன்பாடு

சேலம்: சந்திரயான்-3 விண்கலத்துக்கு சேலம் இரும்பாலையின் ஸ்டெயின்லெஸ் தகடுகள் பயன்படுத்தப்பட்டது போல, சூரியனை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா-1 விண்கலத்திலும், சேலம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, சேலத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.

சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை சென்றடைந்ததன் மூலம் உலக நாடுகளிடையே, இந்தியாவுக்கு மிகப்பெரும் கவுரவம் கிடைத்துள்ளது. இத்தகு சந்திரயான் திட்ட வெற்றியில், சேலத்துக்கும் பங்களிப்பு இருப்பதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதல் பெருமை கிடைத்துள்ளது. குறிப்பாக, சந்திரயான்-3 விண்கலத்தின் இன்ஜின் சேம்பரில் பொருத்துவதற்காக ஐசிஎஸ்எஸ்- 1218- 321 என்ற குளிரூட்டப்பட்ட ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தகடு வழங்கியது சேலம் இரும்பாலை.

அதிலும் குறிப்பாக, சந்திரயான் முதல் திட்டம் தொடங்கி, சந்திரயான்-3 வரை, அதன் திட்டங்களுக்கு, சேலம் இரும்பாலை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகளை வழங்கியுள்ளது. இதேபோல், சந்திரயான் விண்கலத்துக்கு சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு மூலமாக, ஸ்டெப்பர் மோட்டார் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டது, கூடுதல் பெருமையாக அமைந்தது.

இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ஆதித்யா-1 விண்கலத்திலும் சேலம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேலம் இரும்பாலையின் 304L ரக 2.5 , 6.0, 6.5 மிமீ., ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தகடுகள் சூரியன் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளவிருக்கும் ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

விண்வெளி திட்டங்களில் தமிழக விஞ்ஞானிகளும், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் முக்கிய பங்கு வகிப்பது, தமிழகத்துக்கு சர்வதேச அளவில் பெருமையை தேடி தந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x