Last Updated : 05 Sep, 2023 09:59 PM

 

Published : 05 Sep 2023 09:59 PM
Last Updated : 05 Sep 2023 09:59 PM

நாட்டுவெடியால் வாய் சிதறி பெண் யானை உயிரிழப்பு: கோவையில் தொடர்கதையாகும் நிகழ்வுகள்

கோவை: நாட்டுவெடியை கடித்ததால் வாய் சிதறி கோவையில் பெண் யானை உயிரிழந்துள்ளது வன உயிரின ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட தடாகத்தை அடுத்த எண்.24 வீரபாண்டியில் உள்ள தனியார் செங்கள் சூளை அருகே இன்று (செப்.5) காலை வனப்பணியாளர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டு யானை ஒன்று படுத்துகிடப்பது கண்டறியபட்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதையடுத்து, வனக்கால்நடை மருத்துவர்கள் அங்கு வந்து யானையை பரிசோதனை செய்ததில், வாயில் காயம் இருப்பது கண்டறியப்பட்டது. அது, அவுட்காயால் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர் தெரிவித்தநிலையில், யானைக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி யானை மதியம் உயிரிழந்தது. அதன் உடலானது மாங்கரை வன ஓய்வு விடுதி வளாக பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வனக்கால்நடை மருத்துவர்கள் சுகுமார் மற்றும் விஜயராகவன் ஆகியோர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் மருத்துவர்கள் கூறும்போது, "உயிரிழந்த பெண் யானைக்கு 6 வயதிருக்கும். நாட்டு வெடியை கடித்தபோது வெடித்ததால், நாக்கு கடுமையாக சேதமடைந்திருந்தது. கீழ் தாடை பகுதி துண்டாகியிருந்தது. அதனால் உணவை மென்று விழுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2 முதல் 3 வாரங்கள் யானை உணவு ஏதும் உட்கொள்ளவில்லை. இதனால் அதன் வயிற்று பகுதியில் உணவு ஏதும் இல்லை”என்றனர்.

நடவடிக்கை ஏதும் இல்லை: இதுதொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, "விளைநிலங்களுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகளை கொல்லவும், அவற்றின் இறைச்சிக்காகவும் அவுட்காய் எனப்படும் நாட்டுவெடியை சிலர் பயன்படுத்துகின்றனர். இவற்றை சிலநேரங்களில் கால்நடைகள், மான்கள், யானைகள் கடிக்கும்போது அவை வெடித்து வாய் சிதறி உயிரிழப்புகள் ஏற்படுவது கோவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் மாதம் காரமடை வனச்சரகத்தில் இதேபோன்று நாட்டுவெடியால் வாய் சிதறி யானை ஒன்று உயிரிழந்தது. ஆனால், இதுவரை பெரும்பாலான சம்பவங்களில், அதற்கு காரணமானவர்கள் கண்டறியப்படவில்லை. கைதும் செய்யப்படவில்லை. வெடிபொருட்கள் சட்டத்தின்கீழ் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினரும் இந்த வழக்குகளை பெரிதாக கண்டுகொள்வதில்லை. எனவேதான், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x