Published : 05 Sep 2023 04:07 PM
Last Updated : 05 Sep 2023 04:07 PM
புதுச்சேரி: பாரத தேசம் என்பது பெருமை சேர்க்கும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றுவதை வரவேற்கிறோம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமியும் தெரிவித்துள்ளார்.
ஜி20 விருந்து அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் கேட்டதற்கு, "பாரத தேசம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். முன்பு பாரதம் என்று அழைத்தோம். ஆங்கிலேயர் தாக்கம் எங்கிருக்கிறதோ அதில் விடுபட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் என்று பாரதி கூறியுள்ளார். பாரத தேசம் என்று அழைத்தால் மகிழ்வேன்.
உதயநிதி தவறாக பேசிவிட்டு, மீண்டும் அதை சொல்கிறார். இலங்கையில் நம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது மத்தியிலும், மாநிலத்திலும் அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது அவர்கள் நிலைப்பாடு என்ன - அப்போதைய ஆட்சியாளர்களுடன் அவர்கள்தான் இருக்கிறார்கள். பேச்சுக்கு அரை நாள் உண்ணாவிரதம் இருந்தனர். நாடகம் நடத்தி கொண்டிருந்தார்கள். பெரும்பான்மை மக்கள் புண்படும்படி உதயநிதி கருத்து சொல்லிவிட்டு, ராஜாராம் மோகன் ராய் காலத்துக்கு சென்றுவிட்டார். உடன்கட்டை ஏறினர்- பெண்கள் படிக்கவில்லை என்கிறார்- ஆனால் மகாராணிகளாக இருந்தார்கள்.
இடையில் ஆங்கிலேயர் சூழ்ச்சியால் அழுத்தங்கள் ஏற்பட்டது. பெரும்பான்மை மக்கள் மனதை புண்படுத்த வேண்டாம். சாதி ரீதியாக கொண்டு செல்கிறார்கள். புரியாமல் பேசவேண்டாம். உங்களுக்கு விளையாட்டாக இருக்கலாம் - ஆனால் பின்பற்றுவோருக்கு இல்லை. முதல்வருக்கு தெரியாமல் கோப்புகள் அனுமதிக்கப்படுவதில்லை. கேரளம், மும்பை, சென்னை போல் பாரத தேசம் என்பது பெருமை சேர்க்கும்'' என்று குறிப்பிட்டார்.
வரவேற்கும் முதல்வர் ரங்கசாமி: இதுபற்றி முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றியுள்ளதை வரவேற்கிறோம். பாரத நாடு, பழம்பெரும் நாடு என்பதால் வரவேற்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தலைப் பொறுத்தவரையில், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்துள்ளது. அம்முறையில் உடன்பாடு உள்ளது. வரவேற்க்கத்தக்கது" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT