Last Updated : 05 Sep, 2023 04:50 PM

 

Published : 05 Sep 2023 04:50 PM
Last Updated : 05 Sep 2023 04:50 PM

நிலுவை வழக்குகளுக்கு விரைவான தீர்வு தரும் சமரச மையம் - ஒரு பார்வை

கோவை: நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கோவையில் உள்ள நீதிமன்றங்களில் மட்டும் சிவில், காசோலை வழக்குகள் என உரிமையியல் தொடர்பான சுமார் 46,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு, நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும், அவற்றுக்கு விரைந்து தீர்வு காணவும் அறிமுகப் படுத்தப்பட்டதுதான் சமரச தீர்வு மையங்கள்.

தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்ற வளாகங்களிலும் சமரச தீர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு அதிக செலவின்றி விரைவாக தீர்வு கிடைப்பதால் சமரச தீர்வு மையங்கள் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. கோவையில் உள்ள மாவட்ட சமரச தீர்வு மையம் மூலம் கடந்த 2021 ஜனவரி முதல் 2023 ஆகஸ்ட் வரை மட்டும் 306 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமரச தீர்வு மைய வழக்கறிஞர்கள் கூறியதாவது: சமரசம் என்பது ஒரு நடுநிலையான, பொதுவான சமரசர் (Mediator) முன்னிலையில், இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களுக்கான தீர்வை தாங்களே எட்டும் ஒரு எளிமையான தீர்வு முறை ஆகும்.

60 நாளில் தீர்வு: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பயிற்சி பெற்ற சமரசர்கள் உதவியுடன் விரைவாக சுமுகத் தீர்வு காண, வழக்கு தொடர்ந்தவர்கள் தாங்களாகவோ அல்லது தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ வேண்டுகோள் விடுக்கலாம். அதன் பிறகு, அந்த வழக்கு நீதிமன்ற சமரச மையத்துக்கு அனுப்பப்படும்.

மேலும், சமரசமாக தீர்வு காண உகந்த வழக்குகளை நீதிமன்றமே சமரச மையத்துக்கோ அல்லது ஏதாவது ஒரு மாற்றுத் தீர்வு முறைக்கு (Alternative Dispute Resolution) அனுப்ப வேண்டும். பாகப்பிரிவினை வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், பண வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழில் தகராறு வழக்குகள், காசோலை வழக்குகள் என குற்றவியல் வழக்குகள் தவிர்த்த பிற வழக்குகளை சமரச முறையில் தீர்வு காணலாம்.

இதில், அதிகபட்சம் 60 நாட்களில் தீர்வு காணப்படுகிறது. வணிக வழக்குகளை பொறுத்தவரை நேரடியாக சமரச மையத்தை அணுகி, தீர்வு எட்டப்படவில்லையெனில் வழக்கு தொடர முடியும்.

வெற்றி, தோல்வி இல்லை: வழக்கு தொடர்ந்தவர், எதிர்தரப்பினர் ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தையை பயிற்சி பெற்ற சமரசர் வழிநடத்துவார். சமரசர் தனது தீர்வை திணிக்கமாட்டார். சமரசம் முழுமையும் இருதரப்பினரின் விருப்பத்துக்கு உட்பட்டது. வழக்கின் இருதரப்பினரும், தங்களுக்கான தீர்வை தாங்களே எட்டிக்கொள்வதால் மேல்முறையீடு இல்லை.

இருதரப்பினரின் தேவைகளை ஒட்டி தீர்வு கிடைப்பதால் மன நிறைவு ஏற்படுகிறது. இதில், ஒருவருக்கு மட்டுமே வெற்றி கிடைத்தது என்ற பேச்சுக்கே இடமில்லை. சமரசப் பேச்சுவார்த்தையின்போது பேசப்படும் விஷயங்கள் ரகசியம் காக்கப்படும். சமரசப் பேச்சில் என்ன நடந்தது என்பதை ஆவணப்படுத்தி நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படாது.

சமரசம் ஏற்படவில்லையெனில், வழக்கு எந்த நிலையில் சமரச மையத்துக்கு அனுப்பப்பட்டதோ, அந்த நிலையில் இருந்தே நீதிமன்றத்தில் விசாரணை தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

“எனது 20 ஆண்டுகால வழக்கறிஞர் தொழிலின் பெரும்பகுதி நூற்றுக்கணக்கான வழக்குகளை சமரசம் செய்வதிலேயே கழிந்தது. அதனால், நான் எதையும் இழக்கவில்லை. பணத்தையும் இழக்கவில்லை. நிச்சயமாக என் ஆன்மாவை இழக்கவில்லை” என மகாத்மா காந்தி குறிப்பிடுகிறார். எனவே, சச்சரவுகளை தீர்க்க, நாமும் சமரசத்தை நாடலாமே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x