Published : 05 Sep 2023 11:03 AM
Last Updated : 05 Sep 2023 11:03 AM

“ஒரே நாடு, ஒரே தேர்தல்... மோடி அரசின் சர்வாதிகாரம்” - உ.வாசுகி கண்டனம்

உ.வாசுகி | கோப்புப் படம்

கடலூர்: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மோடி அரசின் சர்வாதிகாரப் போக்கு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடலூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செப். 1-ம் தேதி தொடங்கி செப்.7-ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், ‘மோடி அரசே வேலை கொடு. விலையைகுறை' என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெறுகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் 10 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன.

இதேபோல் அவுட் சோர்சிங், ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளை மாற்றி, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மோடி அரசை கண்டித்து செப்.7-ம்தேதி தமிழகத்தில் மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

பிரதமர் மோடி, தான் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பத்தை உருவாக்கும் வகையில் பேசி வருகிறார். அண்மையில் சிஏஜி வெளியிட்ட அறிக்கையில், மத்தியஅரசின் பல்வேறு திட்டங்களில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஊழல்நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. அதானியின் மோசடி குறித்து ஒரு அமெரிக்க நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

ஆனால் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகளை அமித்ஷாஉள்ளிட்ட பாஜக தலைவர்கள்திரித்து கூறுவது அவசியமற்றது. கடலூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

எனவே கர்நாடக அரசு காவிரியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மோடி அரசின் சர்வாதிகாரப் போக்கு. இது அவர்களின் தோல்விபயத்தையே காட்டுகிறது. இண்டியா கூட்டணி மத்திய அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனத் தெரிவித்தார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x