Published : 05 Sep 2023 06:28 AM
Last Updated : 05 Sep 2023 06:28 AM
சென்னை: டெல்லியில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 3-வது சர்வதேச கடல்சார் இந்திய உச்சிமாநாட்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் சர்வதேச கடல்சார் இந்திய உச்சிமாநாடு தொடர்பாக சென்னையில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசியதாவது: சர்வதேச கடல்சார் இந்திய உச்சி மாநாடு வரும் அக். 17 முதல் 19-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா கப்பல் பயணம் தொடங்கப்பட்டது. இதுவரை 27 கப்பல்கள் சேவை இயக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகம், சர்வதேச கப்பல் முனையத்தின் சக்தியாகத் திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார். தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, "கடல் கடந்த வாணிபத்தில் பல்லவ, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் சிறந்து விளங்கினர்.
கடலில் நீரோட்டத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவன் தமிழன்தான். தமிழகத்தின் 2-வது பெரிய துறைமுகமாகத் திகழும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டம், தமிழகத்தின் தென் பிராந்தியத்தில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைக் கொண்டது.
இந்த திட்டம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும், இந்திய ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் செலவைக் குறைக்கும். எனவே, இந்த திட்டத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்வதுடன், உரிய நிதியை ஒதுக்க வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறைச் செயலர் டி.கே.ராமச்சந்திரன், தமிழக அரசின் தொழில் மற்றும் முதலீடு வணிகத் துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலர் பிரதீப் யாதவ், சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால், காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குநர் ஐரின் சிந்தியா, தூத்துக்குடி வஉசி துறைமுகத் தலைவர் (பொறுப்பு) பிமல் குமார் ஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.1.40 லட்சம் கோடியில் 106 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றில் 48 திட்டங்கள் ரூ.36 ஆயிரம் கோடியில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.64 ஆயிரம் கோடியில் 28 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மேலும், தூத்துக்குடியில் ரூ.50 ஆயிரம் கோடியில் பசுமை ஹைட்ரஜன் மையம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார். தொடர்ந்து, காமராஜர் துறைமுகத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கான குடியிருப்புகளை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திறந்துவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT