Published : 05 Sep 2023 07:37 AM
Last Updated : 05 Sep 2023 07:37 AM

அமைச்சர் மஸ்தானின் மகன், மருமகனின் கட்சி பதவி பறிப்பு - பல்வேறு புகார்களின் எதிரொலியாக திமுக தலைமை நடவடிக்கை

கள்ளக்குறிச்சி: பல்வேறு புகார்களின் எதிரொலியாக அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி மற்றும் மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சிப் பதவிகளை பறித்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராகவும் செஞ்சி மஸ்தான் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் மொக்தியார் அலி. திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து இவர் விடுவிக்கப்பட்டு, இவருக்குப் பதிலாக பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்த ரோமியன் என்பவர் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக இருந்து வந்த மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பள்ளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஷேக்வாகித் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி: கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது கட்சியில் நீண்ட காலம் இருப்பவர்களை புறம்தள்ளி, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தோருக்கு சீட் கொடுத்தது, முக்கிய சில பொறுப்புகளை தன் குடும்ப உறுப்பினர்களுக்கே வழங்கியது போன்றவற்றில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரான செஞ்சி மஸ்தான் மீது அதிருப்தி நிலவி வந்தது.

இதற்கிடையே, மரக்காணம் கள்ளச்சாராய சம்பவத்தில் தொடர்புடைய நபராக கருதப்படும் மரூர் ராஜாவுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

கவுன்சிலர்கள் போர்க்கொடி: கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து, நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 31 -ம் தேதி திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வாயில் கருப்புத் துணி கட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர். இக்கூட்டத்தில் பேசிய திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் 13 பேரும் தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்யவில்லை எனக் குற்றம்சாட்டினர்.

திண்டிவனம் நகர்மன்றத் தலைவர் மற்றும் அவரது கணவர் செஞ்சி மஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். இப்பகுதியின் சிக்கல்கள் குறித்து, செஞ்சி மஸ்தானுக்கு எதிராக திண்டிவனம் நகர்மன்றக் கவுன்சிலர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் புகார் கொடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமை அதிருப்தி: இதனிடையே அமைச்சரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் கட்சிப் பதவிகளை திமுக தலைமை பறித்துள்ளது. கட்சித் தலைமையின் இச்செயல், மஸ்தான் மீதான அதிருப்தியை அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோர் மூலம் வெளிப்படுத்தியிருப்பதாக அவரது எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி தற்போது செஞ்சி பேரூராட்சித் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x