Published : 05 Sep 2023 05:46 AM
Last Updated : 05 Sep 2023 05:46 AM
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தெலங்கானா ஆளுநர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: வளரும் தலைமுறையினருக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பித்து, சிறந்த சமுதாயத்தை உருவாக்கப் பணியாற்றுபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாகத் திகழ்வதுடன், நல்ல குடிமக்களை உருவாக்கி, சிறந்த தேசத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்குமகத்தானது. ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பல தொழில்கள் இருந்தாலும், அவற்றில் சிறந்த தொழில் ஆசிரியர் தொழில் என்று சொன்னால் அது மிகையாகாது. அறிவொளி பெறுவதற்கு அடிப்படையாக விளங்கும் கல்வியைப் போதிக்கும் உன்னதமான ஆசிரியப் பணியை மேற்கொண்டு வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: ஆசிரியர்கள்தான் சிறந்த குடிமக்களை வகுப்பறையில் உருவாக்குகிறார்கள். பல மாணவர்கள் நல்ல ஆசிரியர்களிடம் பயின்ற காரணத்தால், பல்வேறு நிலைகளில் உயர்ந்து சாதனைகளைப் படைத்துள்ளனர். இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மாணவர்களின் உயர்வு, சமூக உயர்வு மட்டுமின்றி நாட்டின்உயர்வுக்கும் பாடுபடும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் கல்வி மட்டுமே அனைவரையும் கரை சேர்க்கும் கருவி. நாட்டின் எதிர்காலச் செல்வங்களான இளம் பிஞ்சுகளுக்கு கல்வி புகட்டி வரும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: சமூகத்தின் ஏணியாக இருந்து, நாட்டின் முன்னேற்றத்துக்குக் காரணமாகத் திகழும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இந்நாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அன்பு, கருணை, பொதுநலன், தேசப்பற்று, ஒற்றுமை என பல்வேறு குணநலன்களைப் போதிக்கும் ஆசானாக விளங்கும் ஆசிரியர்களை இந்நாளில்போற்றி வணங்குவோம். மாணவர்களின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி என்ற மங்காத அறிவு ஒளியை ஏற்றிவைக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
வி.கே.சசிகலா: மாணவச் சமுதாயத்தை சிறந்த குடிமக்களாக உருவாக்கும் மகத்தானப் பணியை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, சமக தலைவர் சரத்குமார், தவாக தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...