Published : 05 Sep 2023 05:15 AM
Last Updated : 05 Sep 2023 05:15 AM
சென்னை: ‘‘மாநிலங்களை பழிவாங்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. மாநில அரசுகளை சிதைப்பதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சிக்கிறது. சமூக நீதி, மதச்சார்பற்ற அரசியல், பொதுவுடைமை, சமதர்மம், மாநில சுயாட்சி, கூட்டாட்சி ஆகியவை உயிர்ப்போடு வாழும் இந்தியாவை மீ்ட்டெடுக்கத்தான் இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இந்தியாவை காப்பாற்றப்போவது இண்டியா கூட்டணிதான்’’ என்று ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற குரல் பதிவின் முதல் அத்தியாயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முதல் குரல் பதிவை நேற்றுவெளியிட்டார். இந்த குரல் பதிவு, தமிழ் தவிர இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
வஞ்சிக்கும் பாஜக: ‘வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம். இந்தியாவை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள முதல் அத்தியாயத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவுக்காக எல்லோரும் பேசியாக வேண்டியகட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம் காலமாக, மக்கள் அனைவரும் போற்றிப்பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தைசிதைத்து, இந்தியாவின்அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சிக்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த பாஜக, தேர்தலுக்கு முன்பு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் இருந்து கறுப்பு பணத்தை மீட்டுவந்து, ஆளுக்கு ரூ.15 லட்சம்தருவோம், ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருவாயை 2 மடங்கு ஆக்குவோம் என்றும் தெரிவித்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
‘குஜராத் மாடல்’ என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல், தற்போது என்ன ‘மாடல்’ என்றே தெரியாமல் முடியப் போகிறது. நன்றாக இருந்த இந்தியாவின் பொதுத்துறை கட்டமைப்பையும் சீரழித்து சின்னாபின்னமாக்கி விட்டனர். ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது சிலரது நலனாகசுருங்கிவிட்டது. ‘ஏர் இந்தியா’நிறுவனம், இப்போது தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது.
மத உணர்வை தூண்டி..: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியார் கைக்குபோகின்றன. விவசாயிகளின் வருமானமும் இரண்டு மடங்கு ஆகவில்லை, ஏழைகளின் வாழ்க்கை தரமும் உயரவில்லை. இதை மறைக்கவே மதவாதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்களின் மத உணர்வுகளை தூண்டி, அதில் குளிர்காயப் பார்க்கின்றனர்.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் பாஜக விதைத்த வன்முறை வெறுப்பு விதையானது, இந்த ஆண்டு மணிப்பூர் மாநிலத்தை பற்றி எரியவைத்துள்ளதுடன், ஹரியாணாவில் மூட்டிவிடப்பட்ட மதவெறித் தீ, இன்று அப்பாவி மக்களின் உயிரையும், சொத்துகளையும் காவு வாங்குகிறது. இதற்கு இப்போதுமுற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை காப்பாற்ற முடியாது.
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு, கூட்டாட்சி தத்துவத்துக்கு மக்களாட்சியின் மாண்புக்கு எப்போதெல்லாம் ஆபத்து வந்துள்ளதோ, அப்போதெல்லாம் முன்னணிபடையாக திமுக நின்றிருக்கிறது.
பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய இயக்கம் திமுக. வரும் 2024 தேர்தல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டிய தேர்தல்.
நிதி சுயாட்சி பறிப்பு: கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில், மாநிலங்களை அழிக்கின்ற பல மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களின் நிதி உரிமைகளை முழுமையாக பறித்துவிட்டது ஜிஎஸ்டி. இதனால் தமிழகத்தின் நிதி சுயாட்சி பறிபோயிருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என பலமுறை கோரியும் மத்திய அரசு ஏற்கவில்லை.
மத்திய அரசுக்கு தமிழகம் ஆண்டுதோறும் ஏராளமான நிதியை தந்தாலும், மத்திய அரசுக்கு தமிழகம் வரி வருவாயாக செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஈடாக 29 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் கடந்த 2022-ம் ஆண்டு வரை மத்திய அரசுக்கு தமிழகம் கொடுத்தது ரூ.5.16 லட்சம்கோடி. ஆனால், வரி பகிர்வாக திரும்ப கிடைத்தது ரூ.2.08 லட்சம் கோடிதான்.
அதேநேரம், பாஜக ஆளும் ஒரு மாநிலம், மத்தியஅரசுக்கு ரூ.2.24 லட்சம் கோடி கொடுக்கிறது. ஆனால் வரி பகிர்வாக ரூ.9.04 லட்சம் கோடி பெற்றுள்ளது. இவ்வாறு எதிர்க்கட்சிகளை பாஜக பழிவாங்குகிறது.
ரூ.72,311 கோடி இழப்பு: மத்திய நிதிக்குழு ஒதுக்கீட்டை பொருத்தவரை, 12-வதுநிதிக்குழுவில் 5.3 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, 15-வதுநிதிக்குழுவில் 4.07 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ரூ.72,311 கோடியை நாம் இழந்துள்ளோம்.
தமிழகத்துக்கு முத்திரை திட்டங்கள் ஒன்றுகூட இந்த 9 ஆண்டுகளில் தரவில்லை. மாநிலங்களை பழிவாங்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. மாநில அரசுகளை சிதைப்பதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவையும் சிதைக்க பார்க்கின்றனர்.
சமூகநீதி, மதச்சார்பற்ற அரசியல், பொதுவுடைமை, சமதர்மம், சமூக அமைதி, மாநில சுயாட்சி, கூட்டாட்சி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை உயிர்ப்போடு வாழும் இந்தியாதான் உண்மையான இந்தியா. அப்படிப்பட்ட இந்தியாவை மீ்ட்டெடுக்கத்தான், இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இந்தியாவை காப்பாற்றப்போவது இண்டியா கூட்டணிதான்.
பன்முகத்தன்மை கொண்ட பண்பட்ட இந்தியாவை செதுக்குவோம். இனி இது மு.க.ஸ்டாலின் குரலாக மட்டுமல்ல; இந்தியாவின் குரலாக அமையும். இவ்வாறு முதல்வர் அதில் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment