Published : 05 Sep 2023 04:02 AM
Last Updated : 05 Sep 2023 04:02 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மலைப்பையூரைச் சேர்ந்தவர் மீனா (55). இவருக்கும், இவரது உறவினரான தருமபுரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ பெரியசாமிக்கும் (65) இடையில் நிலப் பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி, மலைப்பையூரில் உள்ள விளை நிலத்தில் மீனா வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த பெரிய சாமி தகராறில் ஈடுபட்டதோடு, மீனாவை இரும்பு ராடால் தாக்கினார். இதில், காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
இந்நிலையில், நேற்று மீனாவை அவரது கணவர் சின்னசாமி மற்றும் மகன் விஜய் ஆகியோர் ஆம்புலன்ஸில் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க அழைத்து வந்தனர். அப்போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, “ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ பெரியசாமி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக அவர்களிடம் டி.எஸ்.பி தமிழரசி கூறும்போது, “பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆக.28-ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது, ஜாமீனில் வெளியில் உள்ளார். மேலும், இவ்வழக்கு, தற்போது மரணத்தை உண்டாக்கும் ஆயுதங்களால் தாக்கப்பட்ட வழக்காக மாற்றப் பட்டுள்ளது.
எனவே, ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகம் வருவது முறையல்ல” என்றார். இதையடுத்து, விஜய், சின்ன சாமி ஆகியோர் மட்டும் சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT