Published : 04 Sep 2023 06:28 PM
Last Updated : 04 Sep 2023 06:28 PM

“சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு செப்.10-க்குள் பதவி விலகாவிட்டால்...” - அண்ணாமலை கெடு

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தனது பதவியில் இருந்து இம்மாதம் 10-ஆம் தேதிக்குள் விலக வேண்டும். அவ்வாறு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11-ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பிழைப்புவாதிகள் நடத்திய கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை.

ஆனால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மிக உரிமையை அவர் இழந்து விட்டார்.இன்னும் ஒரு வார காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சேகர்பாபு பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை?

வரும் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள், சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11-ஆம் தேதி, சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, அனைத்துக் கட்சிகளுக்கும் தங்கள் கருத்தை சொல்லும் உரிமை உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதை வாசிக்க > உதயநிதியின் ‘சனாதன ஒழிப்பு’ பேச்சு | “அனைத்துக் கட்சிகளுக்கும் கருத்துரிமை உள்ளது” - காங்கிரஸ் ரியாக்‌ஷன்

அதேநேரத்தில், சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். | வாசிக்க > சனாதன தர்மம் குறித்த உதயநிதி பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

உதயநிதி திட்டவட்டம்: சனாதன ஒழிப்பு மாநாட்டில் ‘சனாதானக் கொள்கையை அழிக்க வேண்டும்’ என்றே தான் பேசியதாகவும், ஆனால் அதனை பாஜக திரித்து போலியான செய்திகளைப் பரப்புவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: பாஜக எனது கருத்தைத் திரித்து போலி செய்தியைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

அதேபோல், “சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியலை, ஒரு கோட்பாட்டை எதிர்த்து பேசுகின்ற ஒன்றாகும். அது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது என்பது போன்றதொரு திரிபுவாதத்தை, பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களே பேசுவது வியப்பாக இருக்கிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அதன் விவரம்: “கருத்தியல், கோட்பாடு குறித்து பேசுவது இந்துக்களுக்கு எதிராக திரிக்கப்படுகிறது” - திருமாவளவன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x