Last Updated : 04 Sep, 2023 04:22 PM

 

Published : 04 Sep 2023 04:22 PM
Last Updated : 04 Sep 2023 04:22 PM

குலசை தசரா விழாவில் சினிமா பாடல், நடனங்களுக்கு தடை: கடந்த ஆண்டு உத்தரவை பின்பற்ற ஐகோர்ட் அறிவுரை

மதுரை: குலசேகரபட்டினம் தசரா விழா கலை நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம், பாடல்களுக்கு தடை விதித்து கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்தாண்டும் பின்பற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா 12 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தசரா விழாவில் விரதம் இருக்கும் பக்தர்கள் கையில் காப்பு வேடுவர், ஆதிவாசி, பெண், காளி, சிவன், விஷ்ணு, முருகன், எமன், குரங்கு, காவலர் போன்று அவரவர்களுக்கு பிடித்த வேடங்கள் அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள்.

விரதம் இருக்கும் பக்தர்கள் வீட்டில் தங்காமல் ஊர் ஊராக சென்று பொதுமக்களிடம் காணிக்கை வசூல் செய்வர். தசரா விழாவின் போது பக்தர்களிடம் வசூலிக்கப்பட்ட காணிக்கையை கோயிலில் செலுத்துவர். தசரா விழாவின் போது கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பத்த லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள். ஆரம்ப காலங்களில் தசரா விழாவின் போது பக்தர்கள் குழுவாக சேர்ந்து கலை நிகழச்சி நடத்தி பொதுமக்களிடம் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

கடந்த 20 ஆண்டுகளாக அதிக காணிக்கை வசூலுக்காக சினிமா, சின்னத்திரை கலைஞர்களை அழைத்து வந்து சினிமா பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்கள், குத்து பாடல்களுக்கு ஆபாசமாக உடையணிந்து நடனம் ஆட வைக்கின்றனர். ஏற்கனவே கோயில் விழாக்களில் ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள், ஆபாச பாடல்கள் இருக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குலசை தசரா விழாவிலும் கலை நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள், பாடல்கள் இருக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும் கடந்த ஆண்டு தசரா விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்கள், குத்து பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்களுக்கு நடனமாடினர். இது போன்ற நடனங்கள், பாடல்கள் விரதமிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது. எனவே, குலசை தசரா விழா கலை நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் தவிர்த்து சினிமா பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்கள், குத்து பாடல்கள், கானா பாடல்களுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கர வர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கடந்த ஆண்டு முறையாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உயர் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக எந்த புகாரும் இல்லை" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "குலசை தசரா விழா கலை நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் 2022-ல் விரிவான உத்தரவு பிறத்துள்ளது. அந்த உத்தரவில் தசரா விழாவின்போது பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாடவும், ஒலிபரப்பவும், ஆடவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருவிழா தொடங்குவது முதல் முடியும் வரை கண்காணித்து கலை நிகழ்ச்சிகளில் பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் இடம் பெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும். பின்பற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x