Published : 04 Sep 2023 02:59 PM
Last Updated : 04 Sep 2023 02:59 PM
திருவண்ணாமலை: திருக்குறளை அவமதிக்கும் வகையில், அரசு பேருந்துகளில் திருக்குறளை மறைத்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ் உணர்வாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உலக பொதுமறை நூல் ‘திருக்குறள்’. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 133 அதிகாரங்களுடன் 1,330 திருக்குறள்களை இயற்றியவர் திருவள்ளுவர். ஆன்மிகம், கல்வி, நல்லொழுக்கம், குடும்பம், இயற்கை, வாழ்வியல் நெறி என இயற்கையுடன் இணைந்து அமைதியாகவும், சகோதரத்துவத்துடனும் மனிதர்கள் வாழ்வதற்கான போதனைகள் கற்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, உலக மக்களை ஈர்த்துள்ளது. திருக்குறளுக்கு தமிழகத்தை ஆட்சி செய்த முந்தைய ஆட்சியாளர்களும், தற்போது ஆட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. திருக்குறளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது.
இதில் ஒரு பகுதியாக, அரசு பேருந்துகளில், உலக பொதுமறை நூலான திருக்குறள் எழுதப்பட்டு, அதற்கான விளக்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசு பேருந்துகளில் பயணிப்பவர்கள், திருக்குறள் மற்றும் விளக்கத்தை படித்து புரிந்துகொள்கின்றனர். மேலும், கைபேசியில் புகைப்படம் எடுத்து ‘ஸ்டேட்டஸ்' வைத்தும், நண்பர்களுக்கு பகிர்ந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், ‘திருக்குறளை அவமதிக்கும்’ வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு பேருந்துகளின் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் பின்புறங்களில் தனியார் நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், வருவாயை மட்டுமே குறியீடாக கொண்டு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சிலர் செயல்படுவதால், திருக்குறளை மறைத்து தனியார் நிறுவன விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் எழுதப்பட்டுள்ள திருக்குறள் மற்றும் விளக்கம் ஆகியவற்றை மறைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், திருக்குறள் மீது நாள்காட்டிகளை (காலண்டர்) தொங்கவிட்டுள்ளது ‘தமிழ்’ உணர்வாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் கூறும்போது, “உலக பொதுமறை நூலான திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தமிழ் உணர்வாளர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர். திருக்குறளை ஓதியவாறு திருவண்ணாமலையில் மலைவலம், திருமணங்கள் மற்றும் புதுமனை புகுவிழா உள்ளிட்டவை நடைபெறுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் திருக்குறளை எடுத்துரைக்க வேண்டும் என தமிழக அரசு கூறி வருகிறது. 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்து மாணவ, மாணவிகள் பரிசுகளை பெறுகின்றனர்.
மேலும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், அரசு பேருந்துகளில் திருக்குறள்களை எழுதி, அதற்கான விளக்கத்தையும் தெரிவித்துள்ளது. ஆனால், வணிக நோக்கத்துடன் செயல்படும் அதிகாரிகள், திருக்குறளை மறைத்து தனியார் நிறுவன விளம்பர பதாகைகளை வைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்று வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மற்றும் நாள்காட்டி உள்ளிட்ட அனைத்து விளம்பரங்களையும் அகற்ற வேண்டும். இந்நிலை தொடராமல் இருக்க தமிழக அரசின் போக்குவரத்து துறை தனி கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...