Published : 04 Sep 2023 01:39 PM
Last Updated : 04 Sep 2023 01:39 PM

சோழிங்கநல்லூர் சோகம்: 12 ஆண்டுகளாக தனியார் லாரிகளை நம்பி இருக்கும் மக்கள்!

சென்னை: சென்னை மாநகராட்சி 2011-ம் ஆண்டுக்கு முன்பு 172 சதுர கிமீ பரப்பளவில் இருந்தது. சென்னையை சுற்றி இருந்த பல உள்ளாட்சிகள் சென்னை மாநகருக்கு இணையாக அபரிமிதமான வளர்ச்சி பெற்றன. அதனால், மாநகரப் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உள்ளிட்ட சேவைகளை, வளர்ச்சி அடைந்த புறநகர் பகுதிகளுக்கும் வழங்க, கடந்த 2011-ம் ஆண்டு அம்பத்தூர், ஆலந்தூர், திருவொற்றியூர் நகராட்சிகள் உள்ளிட்ட 42 உள்ளாட்சி அமைப்புகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதனால் மாநகராட்சியின் பரப்பு 426 சதுர கிமீ ஆக விரிவடைந்தது.

மாநகராட்சியுடன் இணைந்த பல இடங்களில் இன்று வரை குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மைக்கான பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவே இல்லை. இவ்விரு சேவைகளுக்கும் தனியார் லாரிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை கடந்த 12 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மாநகராட்சியுடன் புதிதாக 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைந்த நிலையில், அவற்றில் 17 பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

10 பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 15 பகுதிகளில் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. குடிநீர் வழங்கும் திட்டத்தில் 34 இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. 7 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலாங்கரையில் மட்டும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் பல இடங்களில் இன்னும் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்படவில்லை.

இப்பகுதி மக்கள் கழிவுநீர் லாரிகளையே நம்பியுள்ளனர். இதற்காக தங்கள் மாத வருவாயில் குறிப்பிட்ட தொகையை தனியார் லாரிகளுக்காகவே ஒதுக்க வேண்டியுள்ளது. பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றை செயல்படுத்தாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வட சென்னை, மத்திய சென்னை பகுதிகளைவிட தென் சென்னையில் கழிவுநீர் லாரிகள் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அரசியல் தலையீடு இருப்பதாகவும், குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட உரிமையாளரின் லாரிகள் மட்டுமே சேவையை வழங்கும் என்ற நிர்பந்தம் இருப்பதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதத்தில் கழிவுநீர் லாரிகளை சென்னை குடிநீர் வாரியம் முறைப்படுத்துவதை கண்டித்து கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் 5 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தென் சென்னை பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிகள் பாதிக்கப்பட்டு, பல வீடுகளில் கழிவுநீர் தொட்டிகளில் இருந்து வெளியேறி சாலைகளில் வழிந்தோடின.

இதற்கிடையில் கடந்த ஆக.30-ம் தேதி முதல் தனியார் குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தபோது, குடிநீர் ஆதாரத்துக்கு இந்தலாரிகளையே நம்பியிருக்கும் சோழிங்கநல்லூர் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். போராட்டம் வாபஸ் பெறப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், இவ்வாறு குடிநீர் மற்றும் கழிவுநீர் லாரிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காக போராட்டத்தில் குதிக்கும்போதும் இப்பகுதி மக்கள் தவியாய் தவித்துவிடுகின்றனர். இப்பகுதியில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் சேவையை சென்னை குடிநீர் வாரியம் இதுவரை வழங்காததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வி.பார்த்திபன்

இதுகுறித்து சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் பொதுநலச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வி.பார்த்திபன் கூறியதாவது: மாநகராட்சியோடு இணைந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இத்தொகுதியில் கழிவுநீர், குடிநீர் சேவையை அரசு வழங்கவில்லை. அதனால் தனியார் கழிவுநீர் மற்றும் குடிநீர் லாரிகளையே நம்பி இருக்கிறோம்.

அவர்கள் போராட்டங்களை அறிவித்துவிட்டால் நாங்கள் அவதிக்குள்ளாகிறோம். குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை கறாராக வசூலிக்கும் குடிநீர் வாரியம் இப்போது வரியையும் உயர்த்தியுள்ளது. இங்கு பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் மாதம் ஒரு வீட்டுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவிட வேண்டியுள்ளது.

ஐடி நிறுவனங்கள் அதிகமாக வருவதால், இங்குள்ள குடியிருப்புகள் அனைத்தும், தங்கும் விடுதிகளாக மாறிவிட்டன. இதனால் கழிவுநீர் உற்பத்தி மேலும் அதிகரிக்கிறது. இங்கு குடிநீர் வசதியும் முறையாக இல்லாததால் ஆர்ஓ குடிநீர் கட்டமைப்பு, அதை பராமரிக்கும் செலவு என தனியாக செய்ய வேண்டியுள்ளது. இத்தொகுதியில் கழிவுநீர் லாரி சேவையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வணிகம் நடைபெறுகிறது.

இதில் ரூ.500 கோடிக்கு மேல் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் செல்வதாக கூறப்படுகிறது. இதுதான், இப்பகுதியில் கழிவுநீர் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு தடையாக உள்ளது. துரைப்பாக்கம், காரப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டி, திறப்பு விழா கண்டு 5 மாதங்கள் ஆகின்றன.

இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கி, விநியோகம் நடைபெறவில்லை. இந்த தொகுதியில் குடிநீர் வாரியம் சார்பில் என்ன பணி நடைபெறுகிறது, அது எப்போது முடியும் என்று அவ்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதிலை அளிப்பதில்லை. விரைவில் பணிகளை தொடங்குகிறோம் என்று மட்டுமே கூறுகின்றனர். எந்த பணியையும் தொடங்கவில்லை. இனியாவது குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவையை விரைவாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிக்கரணையில் ரூ.58.61 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இத்திட்டத்தால் 14,600 இல்லங்களுக்கு இணைப்பு வழங்க முடியும். 63,400 மக்கள் பயன்பெறுவர். பெருங்குடியில் ரூ.20.72 கோடியில் நடைபெற்று வரும் பணிகள் இம்மாதம் நிறைவடைய உள்ளன. இதில் 4,500 இணைப்புகள் வழங்கப்படும்.

70,400 பேர் பயன்பெறுவர். சோழிங்க நல்லூர்- காரப்பாக்கம் பகுதியில் ரூ.110.90 கோடியில் நடைபெற்று வரும் பணிகளும் இம்மாதம் நிறைவடையும். 8,100 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படும். 48,941 பேர் பயன்பெறுவர். இத்திட்டத்தில் 80 சதவீதம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ரூ.53.70 கோடியில் சோழிங்கநல்லூர்- காரப்பாக்கம் பகுதிகளில் குடிநீர் வழங்கல் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இம்மாதத்துக்குள் நிறைவடையும். இத்திட்டத்தில் 8,100 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். 90 சதவீத பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது. இத்திட்டத்தால் 48,941 பேர் பயன்பெறுவர்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் போது ஏராளமான வழக்குகள், கழிவுநீரேற்றும் நிலையங்களை அமைக்க பொதுமக்கள் ஆட்சேபிப்பது, பணிகள் மேற்கொள்ளும் பாதையில் இருக்கும் பாறைகள், குடியிருப்பின் நடுவே அவற்றை வெடி வைத்தும் தகர்க்க முடியாத நிலை உள்ளிட்டவை போன்ற பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதனாலேயே பணிகள் தாமதமாகின்றன. இவ்வாறு சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x