Published : 04 Sep 2023 05:38 AM
Last Updated : 04 Sep 2023 05:38 AM
சென்னை: சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை வழங்கவுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப். 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் தேர்வுக் குழுமூலம் 386 சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதகிருஷ்ணன் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. இப்பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நாளை நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்க இருக்கிறார். இதற்கிடையே விருதுக்கு தேர்வானவர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சில அறிவுறுத்தல்களை யும் பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது: ஆசிரியர்கள் தங்களுடன் இரண்டு பேரை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து வரலாம். நிகழ்ச்சி நடைபெறும் நாளில் காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆசிரியர்கள் மீது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஏதும் இல்லை என்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதும் அதற்கான ஆவணங்களுடன் பள்ளியில் இருந்து விடுவித்து, இந்த விழாவில் பங்கேற்க அனுமதி கடிதம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT