Published : 25 Dec 2017 03:50 PM
Last Updated : 25 Dec 2017 03:50 PM
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதும், டெபாசிட் போகும் அளவுக்கு வாக்குகள் குறைந்ததும் பல அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் படுதோல்வி என்கிறார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனோ பணநாயகத்தின் பின்னால் செல்லாமல் ஜனநாயகத்தை மதித்ததால் இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்கிறார்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தேர்தல் கோட்பாடுகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்கிறார். அன்புமனி ராமதாஸ், முத்தரசன், ஜி ராமகிருஷ்ணன் போன்றவர்களும் நடைபெற்ற இடைத் தேர்தல், அதன் முடிவுகள் குறித்து பல விதங்களில் அதிர்ச்சி மதிப்பீடுகளைத்தான் வெளிப்படுத்துகின்றனர்.
தேர்தல் ஜனநாயக முறையிலிருந்து பணநாயக முறைக்கு மாறிவிட்டது அவர்கள் அறியாதது அல்ல. ஆனால் டிடிவி தினகரனின் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதுதான் அவர்கள் சொல்லாமல் சொல்லவரும் செய்தி. ஏனெனில் சற்றும் சளைக்காமல் மதுசூதனன் தரப்பும் பணநாயகத்தில் பங்குபெற்றதும், பணநாயகத்தில் பங்கு பெறலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் ` ஈயம் பூசுனாமாதிரியும் இருக்கணும் பூசாதமாதிரியும்` என்பதுதான் திமுக வேட்பாளரின் கள நிலவரம் என்பதை அவர்கள் அறிவர்.
ஆளுங்கட்சி மீதான அதிருப்தி மக்களிடம் நிலவி வருகையில் அதை பலமான எதிர்க்கட்சியான திமுக அறுவடை செய்யாமல் இருப்பதுதான் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் இல்லை என்கிறார் ஸ்டாலின். ஆனால் ஆளுங்கட்சியும் அறுவடை செய்யவில்லை. சின்னம் கிடைத்த 20 நாட்களில் அதை வாக்குகளாக மாற்றியுள்ளார் சுயேட்சை வேட்பாளர். அதை ஏன் எதிர்க்கட்சிகள் பரிசீலனை செய்யவில்லை.
களத்தில் மும்முனை போட்டிதான் நிலவியது. இதர வேட்பாளர்கள் எந்த இடத்திலும் பொருட்டாகவே கவனிக்கப்படவில்லை. மூன்று வேட்பாளர்களில் இரண்டுபேர் ஒரே கட்சியின் இரு அணிகளாக பிரிந்தவர்கள். சின்னம் வேறாக இருந்தாலும் அவர்கள் நம்பியிருந்த வாக்கு வங்கி ஒன்றே. ஆனால் 60 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட கட்சி, பலமான சின்னம், உறுதியான தலைமை இருந்தும், இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு தேர்தல் களத்தை திமுக ஏன் கவுரவப் பிரச்சினையாக பார்க்கவில்லை?
ஆர்.கே.நகர் தேர்தலில் மாறி மாறி ஒவ்வொருவரும் ஓட்டுக்கு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை பணம் அளித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அது மட்டுமே டிடிவி தினகரனின் வெற்றியை முழுமையான தீர்மானித்துவிடவில்லை. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் 20 நாட்களில் பணம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கும் என்று நம்ப முடியாது.
சில நாட்களுக்கு முன் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே, திட்டமிடாத ஒரு நேரத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு உடனடியாக மக்களை நோக்கி `நான் உங்களுக்கு பணம் கொடுத்தேனா` என டிடிவி தினகரன் கேட்டதாக ஒரு செய்தி வெளியானது. அது ஒரு துணிச்சல்தான். ஆனால் அசட்டுத் துணிச்சல் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அனைத்தையும் இழந்து நிற்கும்போது வெற்றி பெற வேண்டும் என்கிற ஒரே இலக்கில் உள்ள மனநிலை. அல்லது ஒரே வாய்ப்புதான் உள்ளது ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்கிற மனநிலை.
ஆனால் தலைமை பலம் பொருந்திய திமுக இந்த மனநிலையோடு ஆர்.கே நகரை அணுகியதா என்றால் இல்லை. அதிமுகவுக்கு சேர வேண்டிய வாக்குகள் சமமாக பிரிந்துவிடும், இதனால் நமக்கு வெற்றி வாய்ப்பு எளிது என்கிற கணக்கில்தான் இறங்கியுள்ளது. இது வழக்கமான தேர்தல் கணக்குதான். ஆனால் இந்த கணக்கை மட்டுமே நம்பி திமுக இறங்கி இருக்கக்கூடாது. ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தி எதிர்க்கட்சிக்கான ஓட்டாக மாறும் என்கிற கணக்கும் ஆர்.கே.நகரில் எடுபடவில்லை. ஆனால் திமுகவின் பரிதாபமோ கடந்த முறை சிம்லா முத்துச் சோழன் பெற்ற வாக்குகளைக் கூட இந்த தேர்தலில் அடைய முடியவில்லை என்கிற நிலைக்கு சென்றுள்ளது.
ஆளும்கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையிலும், அதிமுக உள்கட்சி பிரச்சினையில் அரசு ஆட்டம் காண்கிற சூழலிலும், அவர்களாகவே அழித்துக் கொள்வார்கள் என ஸ்டாலின் நினைக்கிறார். அதிமுக ஆட்சி நடைபெறும் வரையில் நடக்கட்டும். ஆட்சியை கவிழ்த்து கைப்பற்றுவதும், உடனடியாய் தேர்தல் களம் காண்பதும் செயல் திட்டத்தில் இல்லை என்பதுதான் ஸ்டாலின் சொல்ல வருவது. ஏற்கெனவே இதனை திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை எளிதாகக் கையாண்டதோ என்று யோசிக்க வைக்கிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை திமுக வெற்றிபெற்றதில்லை.
ஆனால் பலமான வேட்பாளர்களை நிறுத்தி போட்டியை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த முறை தொகுதி நமக்கில்லை
என முடிவு செய்ததால் வழக்கமான திமுக வாக்கு வங்கியிலும் மனமாற்றம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக சிறுபான்மையினர் வாக்கு வங்கி அதிகமுள்ள தொகுதியில் அதைக் கவர்வதற்கான முயற்சிகளை அழுத்தமாக மேற்கொள்ளவில்லை. சில திமுக அணிகள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின்றன.
ஆக தினகரன் வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் நிகழும் அல்லது ஆட்சி கவிழும் என்பதை எதிர்பார்த்தே திமுக தனது வெற்றிக்கான போராட்டத்தை குறைத்துள்ளது. அல்லது டிடிவி தினகரன் வெற்றிபெற மறைமுகமாக உதவியுள்ளது என்பதாகவும் சொல்லலாம்.
ஏனென்றால் இந்த இடைத்தேர்தல் இழப்பு பொருட்படுத்தத் தக்கது அல்ல. இது ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான தேர்தல் முடிவுகளை பாதிக்காது. அல்லது அப்படியே தேர்தல் வந்தாலும் திமுகவே வெல்லும் என திமுக தலைமை நம்புகிறது. தவிர தமிழகம் முழுவதும் தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவில் உறுதியான தலைமை இல்லை என்பதுடன், தினகரன் பார்முலா எல்லா தொகுதிகளுக்கும் எடுபடாது என்பதும் திமுகவின் கணிப்பாக இருக்கலாம்.
ஆனால் ஆர்.கே நகர் மக்கள் டிடிவி தினகரனுக்கு வாய்ப்பளித்ததன் மூலம் பல கணிப்புகளுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தை டிடிவி தினகரன் கையிலெடுத்தார். அதனால் சிறுபான்மையினர் வாக்குகளை கணிசமாக பெற்றுள்ளார். திமுக பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை கையில் எடுக்கவில்லை.
பாஜக அரசு அதிமுகவை இயக்குகிறது. அதன் காரணமாய் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பாஜக சொல்வதைக் கேட்டு நடப்பதால் தமிழக நலன் புறக்கணிக்கப்படுகிறது என்கிற மனநிலை மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்துக்கான நெருக்கடிகள் மூலம் இந்த பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது.
கருணாநிதியை மோடி வந்து சந்தித்தது அதன் பின்னர் 2ஜி வழக்கு விடுதலை போன்றவற்றை இணைத்து திமுக பாஜக இணக்கம் உருவாகலாம் என்கிற தோற்றம். இதை உறுதியாகக் கூறமுடியாது. இப்போதுவரை இந்த விஷயத்தில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். எனினும் அரசியலில் எதுவும் நிச்சயமில்லை என்பது நிரூபணமான ஒன்று.
செயல்படாத அரசை சாடுவதில் இப்போதுவரை திமுகவை விட டிடிவி தினகரன் முனைப்புடன் உள்ளார். தமிழகத்தை பாதிக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கு பின்னாலும் அறிக்கை விடுவதுடன் ஸ்டாலின் நிறுத்திக் கொள்கிறார். பிற எதிர்கட்சிகளும் இதில் வரம்போடுதான் உள்ளனர். ஆனால் தினகரன் அளவுக்கு ஆளும் அரசை கடுமையாய் சாடவில்லை. இந்த ஆட்சி கவிழ்ந்தால் நல்லது என்கிற மக்கள் உணர்வுகளை சரியாக டிடிவி தினகரன் பிரதிபலிக்கிறார். சட்ட வடிவங்களை கையிலெடுக்கிறார். இது மக்களிடையே அவர் மீதான பிம்பத்தை உருவாக்கிறது.
முக்கியமான எளிதாக அணுகும் முறையை தினகரன் கையாளுகிறார் என்பது அவருக்கு சாதகமான அம்சமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதெல்லாம் ஒரு தகுதியா என இதை எளிதாக புறக்கணித்துவிட முடியாது. ஏனென்றால் திமுக செயல் தலைவரிடம் உள்ள அளவிட முடியா நம்பிக்கையின் உச்சமாக பலமுறை அவர் ஊடகங்களை அலட்சியமாக கையாள்வதை பார்க்கிறோம். இது பழுத்த அரசியல் தலைவராக அவரது அணுகுமுறை கெட்டித்தட்டிக் கொண்டிருப்பதன் வெளிப்பாடு. இந்த இறுகிய தன்மை உருவாக்கும் இடைவெளி அவரை தமிழக இளந்தலைமுறை வாக்காளர்களிடமிருந்து அந்நியப்படுத்தி வருகிறது.
இந்திய அரங்கில் தமிழ்நாட்டுக்கான தனித் தன்மையை உருவாக்கிய கொள்கை, கோட்பாடுகளை கொண்ட கட்சி, அதன் அசைக்க முடியாத தலைமையாக இருந்தும் தமிழக அரசியலில் தலைமை வெற்றிடம் உருவாகியுள்ளதாக ஒரு தோற்றம் உருவாகத் தொடங்கியுள்ளதை இப்போதுவரை அலட்சியமாக கையாண்டு வருகிறது. இந்த இடைக்கால வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கு நடிகர்கள் தயாராகி வருகின்றனர்.
அதிமுகவின் ஒரு அணியாக ஓட்டுகளை பிரித்தாலும், 20 நாட்களில் ஒரு சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த தேர்தல் வியூகம் புதியதுதான். பிரச்சார அனுமதி வாங்குவதற்கு நெருக்கடி, வாக்கு இயந்திரத்தில் முன்னுரிமை இல்லை, ஆளுங்கட்சி அதிகார பலம், எதிராக களத்தில் வேலைபார்த்த முதல் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை என எல்லாவற்றையும் தாண்டித்தான் தினகரனின் வெற்றி உள்ளது. இதை புறங்கையால் தள்ளிவிட முடியாது.
இந்த கணிப்புகள் ஓட்டுமொத்த தமிழக தேர்தலிலும் எதிரொலிக்காது என்று சொல்லமுடியாது. பணநாயகமாகவே இருந்தாலும் மக்கள் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்துதான் முடிவுகளை தீர்மானிக்கிறார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். கனிந்து வரட்டும் காத்திருக்கலாம் என்கிற மனநிலையில் திமுக இனியும் இருக்குமானால் கைக்கு எட்டிய தொலைவில் இருக்கும் செயல் தலைவரின் ஆட்சி அரியணை கானல்நீர்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT