Published : 02 Dec 2017 09:42 AM
Last Updated : 02 Dec 2017 09:42 AM

ஜனவரி 31-க்குள் நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு கமிட்டி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர்ப்பலியை தடுக்க, நாடு முழுவதும் வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலை பாதுகாப்பு கமிட்டியை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 கட்டளைகளை பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவரும், கோவை கங்கா மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் எஸ்.ராஜசேகரன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘90 சதவீத உயிர்ப்பலிகள் சாலை விதிகளை மீறுவதால்தான் நடைபெறுகிறது. எனவே சாலை பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அவற்றை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் தேவை யான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோரி யிருந்தார்.

இந்த மனுவை பொதுநல மனுவாக எடுத்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகி யோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த விரிவான உத்தரவில் கூறியிருப்பதாவது:

சாலை பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த ஏற்கெனவே ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி கடந்த 2014-ம் ஆண்டே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கமிட்டிக்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. சராசரியாக ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் சாலை விபத்துகளால் இறக்கின்றனர். 3 நிமிடத்துக்கு ஒருவர் சாலை விபத்தால் உயிரிழக்கிறார்.

சாலை பாதுகாப்புக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டும், உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகரிப்பது வேதனைக்குரியது. கடந்த 2015-16-ல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரூ. 11 ஆயிரத்து 480 கோடியை இழப்பீடாக வழங்கியுள்ளன. எனவே நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நிரந்தர சாலை பாதுகாப்பு மையங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் சாலை பாதுகாப்பு கமிட்டி அமைக்க வேண்டும். இதற்காக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் கொள்கைகளை வகுத்து, பிரத்யேக கவுன்சில், முன்னோடி அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

சாலை பாதுகாப்பு நிதி மற்றும் செயல் திட்டத்தை மார்ச் 31-க்குள் ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க ஓட்டுநர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி விதிமீறலை கண்டுபிடிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட 25 கட்டளைகளை பிறப்பித்து, விசாரணையை வரும் பிப்ரவரி 7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x