Published : 03 Sep 2023 05:58 PM
Last Updated : 03 Sep 2023 05:58 PM

வரும் 17ம் தேதி வேலூரில் திமுகவின் முப்பெரும் விழா - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: மும்பையில் நடந்த இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று அறிவிக்கப்பட்டபோது, பாஜக அரசின் பயத்தின் விளைவை சமையல் கேஸ் சிலிண்டர் விலைக் குறைப்பு நாடகம் அம்பலப்படுத்திவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்று இண்டியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில் உருவாக்கியபோது ஏளனம் பேசினார்கள். ‘இது ஃபோட்டோ செஷன்’ என்று நகையாடினார் ஒன்றிய உள்துறை அமைச்சர். நகையாடியவர்களின் கண்களில் பயமாடுவதை பெங்களூரு நகரில் நடந்த இண்டியா கூட்டணியின் இரண்டாவது கூட்டத்தில் காண முடிந்தது. அதன் பிறகு, இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பை மாநகரில் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும் அதில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும் அறிவிக்கப்பட்டபோது, பாஜக அரசின் பயத்தின் விளைவை சமையல் கேஸ் சிலிண்டர் விலைக் குறைப்பு நாடகம் அம்பலப்படுத்திவிட்டது.

10 ஆண்டு காலமாக இந்தியாவை மதத்தின் பெயரால் பாழ்படுத்தி, கடும் விலையேற்றத்தால் மக்களை வதைத்து, அவரவர் தாய்மொழியையும் மாநில உரிமைகளையும் நசுக்கி, பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டு உணர்வுகளை ஒடுக்கி, ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே தேர்தல் - ஒரே உணவு என்ற சர்வாதிகாரத்தனத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக இண்டியா கூட்டணியில் இணைந்திருப்பவை அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிற வாக்காளர்களும்தான். இந்த ஒற்றுமை உணர்வை ஒருமுகப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது ஒன்றே, இந்திய ஒன்றியத்தைக் காப்பாற்றுவதற்கான வழி என்பதால் அதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதனைச் செயல்படுத்துவதற்குப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுத் தங்கள் பணியை மேற்கொள்கின்றனர். இந்திய அளவில் தவிர்க்க முடியாத இயக்கமாகத் திகழ்கிறது திமுக எனும் பேரியக்கம்.

சென்னை மண்ணடி பவளக்காரத் தெரு, 7-ம் எண் வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டு, ராயபுரம் ராபின்சன் பூங்கா பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட இயக்கம், தனது பவள விழாவைக் கொண்டாடும் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், சமூகநீதி, மாநில உரிமை, பன்முகத்தன்மை கொண்ட வகையில் இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் இயக்கமாகவும் திகழ்கிறது என்றால் இது பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. களத்தில் நாம் பெற்ற விழுப்புண்கள் அதிகம். கொடுத்த விலை இன்னும் அதிகம். ஆனால், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு, முதுகு வளையாமல், தரையில் தவழாமல், நெஞ்சை நிமிர்த்தி நின்று, ‘நான் திமுககாரன், நான் கலைஞரின் உடன்பிறப்பு’ என்று கம்பீரமாகச் சொல்கின்ற துணிவும் வலிவுமே கட்சியினரின் அடையாளம்.

தலைவர் கருணாநிதியின் வழியில் இந்த ஆண்டும் கட்சியைக் காத்த லட்சிய வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரியார் விருது மயிலாடுதுறை சத்தியசீலனுக்கும், அண்ணா விருது மீஞ்சூர் க.சுந்தரத்துக்கும், கலைஞர் விருது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருது பெங்களூரு ந.ராமசாமிக்கும் செப்டம்பர் 17 அன்று தீரமிக்க வேலூர் மாநகரில் நடைபெறவுள்ள கட்சியின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழாவில் வழங்கப்படும். கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக பாடுபடும் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களுக்கான விருதுகளும் முப்பெரும் விழாவில் வழங்கப்பட இருக்கின்றன.

வீரம் செறிந்த வேலூரின் அடையாளமாக கோட்டை இருப்பதுடன், வேலூர் எப்போதும் திமுகவின் கோட்டைதான் என்பதைப் பல்வேறு களங்களில் நிரூபித்திருக்கிறது. கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகன் நமக்கு வழங்கியுள்ள கோட்டை. தனது மாணவப் பருவத்திலேயே மொழிப்போர்க் களம் கண்டு, அண்ணாவின் தம்பியாக, கருணாநிதியின் உடன்பிறப்பாக, அவரின் நிழலாக, கட்சியின் வளர்ச்சிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, கொள்கைத் தடம் மாறாமல் பயணிக்கின்ற பொதுச் செயலாளரின் தலைமையில் வேலூரில் முப்பெரும் திருவிழா, பவள விழா நடைபெறுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கு அச்சாரமிடும் வேலூர் முப்பெரும் விழாவுக்கு கொள்கைப் படையாகத் திரண்டு வருக. கழகம் காப்போம் - மொழியைக் காப்போம் - மாநில உரிமை காப்போம் - மக்கள் வாழும் வகையில் நாட்டைக் காப்போம் என்ற உறுதியைத் தருக. நாற்பதும் நமதே - நாடும் நமதே என்ற இலக்கை அடைந்திடச் சூளுரைக்கும் விழாவாக வேலூர் முப்பெரும் விழா அமையட்டும்", என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x