Last Updated : 03 Sep, 2023 05:50 PM

3  

Published : 03 Sep 2023 05:50 PM
Last Updated : 03 Sep 2023 05:50 PM

அக். 2-க்குள் மதுவிலக்கு அமல்படுத்தப்படாவிட்டால் மாநிலம் ஸ்தம்பிக்கும் போராட்டம்: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி | கோப்புப் படம்.

மதுரை: அக்., 2ம் தேதிக்குள் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவில்லை என்றால், மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு கோரி தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறோம். எந்த மாநிலத்திலும் இன்றி தமிழ்நாட்டில் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதமாகியும் குறைக்க, நடவடிக்கை இன்றி அதிகரிக்கவே நடவடிக்கை எடுக்கின்றனர். திண்டுக்கல் அருகே பிறந்த நாளையொட்டி 7 மாணவிகள் மது விருந்து அளித்துள்ளனர். இது போன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் ஊடுருவுகிறது. மதுவிலக்கு வலியுறுத்தி 100 பொதுக்கூட்டம் அறிவித்துள்ளோம். தொடர்ந்து நடத்துகிறோம். இன்று (நேற்று) திருச்சுழியில் நடந்தது. அக்.,2ல் மதுவிலக்கு அமல் இல்லையெனில் தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம். அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

பள்ளி மாணவர்கள் மத்தியில் ஜாதிய மனப்பான்மை மேலோங்கியுள்ளது. நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கிறது. நீதிமன்றம் வரை சென்றாலும், மறுக்கும் காரணத்தை எழுத்துப்பூர்வமாக போலீஸ் அளிக்கவில்லை. இச்சம்பவத்தைக் கண்டித்து விசிக, சிபிஎம் போன்ற கட்சிகள் அறிக்கை விட்டனவே தவிர, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. கூட்டணியில் இருப்பதால் கண்டிக்காமல் விடுவது நியாயமல்ல. நாங்குநேரி பகுதியில் கோயில்களிலும் தீண்டாமை நடக்கிறது. கோயில், மடாதிபதிகள் பெயரிலுள்ள நிலங்கள் விற்கப்படுவதை தடுத்து, அந்நிலங்களை அரசு கையகப்படுத்தி விவசாயம் செய்யும் ஏழைகளுக்கு வழங்க வேண்டும். 40 சதவீத மக்களை வறுமையில் வைக்கவே ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். சமூக நீதி மட்டும் பேசாமல் அதை செயல்படுத்தவேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கட்டாயம் அமல்படுத்தவேண்டும். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்துகிறோம். நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதை மாற்றி, 4 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் தேவை. அப்போது, தான் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி கேட்க முடியும். சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி பேசுகிறார். நாங்குநேரி விவகாரத்தில் அவர் என்ன செய்தார். முதலில் சமூக நீதியை நிலை நாட்டிவிட்டு அவர் சனாதனம் பேசவேண்டும். தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள 62 சுங்கச்சாவடிகளில் 60 ஆந்திரா, மும்பை ஏஜன்சி களால் நடத்தப்படுகின்றன. 32 சுங்கச்சாவடிகள் காலாவதியான பிறகும் தொடர்ந்து செயல்படுகின்றன. இதன்மூலம் வசூலிக்கும் தொகை யாருக்கு செல்கிறது.

தமிழ்நாட்டில் தினமும் சுமார் 1 லட்சம் வாகனங்கள் புதிதாக வாங்கப்படுகின்றன. இவற்றின் மூலமும் சுங்கச்சாவடிகளில் வருவாய் அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடி செயல்பாடு குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். அனைத்து சுங்கச்சாவடிகளையும் மூடவேண்டும். இது போன்ற பிரச்னை குறித்து தமிழகத்திலுள்ள எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதில்லை. எஞ்சிய நாளிலாவது எழுப்பவேண்டும். ஆடு, மாடு வளர்ப்போரின் குழந்தைகளே நீட் தேர்வுக்கு தயாராகிவிட்டார்கள். திமுக மட்டும் அத்தேர்வை சொல்லி மக்களை ஏமாற்றுகிறது. எம்.பி தேர்தலுக்கான இண்டியா கூட்டணியைவிட, நாங்கள் தான் உண்மையான இந்தியா கூட்டணி.'' இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x