Published : 03 Sep 2023 02:44 PM
Last Updated : 03 Sep 2023 02:44 PM

அமைச்சர் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய சட்ட நடவடிக்கை - இந்து முன்னணி அறிவிப்பு

அமைச்சர் சேகர்பாபு | கோப்புப்படம்

சென்னை: பதவிப் பிரமாணத்துக்கு எதிராக செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகுதி நீக்கம் செய்யப்பட தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சனிக்கிழமையன்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கலந்து கொண்டது அவர் சார்ந்துள்ள துறைக்கு எதிரானது. பாராபட்சம் இல்லாமல் செயல்படுவேன் என்று அமைச்சராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது சட்ட மீறலாகும். சனாதன இந்து தர்மத்தை பாதுகாக்கவும், போற்றவும் ஏற்பட்டதுதான் திருக்கோயில்கள். அதனை பராமரிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டது தான் இந்து சமய அறநிலையத் துறை என தமிழக அரசு கூறுகிறது. ஆனால் சனாதனத்தை ஒழிக்க நடந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு அதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தமிழக அரசு திருக்கோயில்களை அழிக்க செயல்படும் மறைமுக திட்டமோ என சந்தேகம் எழுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் அரசு பதவி ஏற்றதில் இருந்து, கோயில் வழிபாடுகளில் தலையிட்டு சீரழித்த பல நிகழ்வுகளும், பராமரிப்பு இன்றி மிக முக்கியமான கோயிலான அரங்கன் கோபுரம் சிதைந்ததும், குற்றாலநாதர் கோயில் சட்டவிரோத கடைகளால் தீப்பிடித்து அரசமரம் மற்றும் விநாயகர் கோயில் தீப்பிடித்து அழிந்ததும் என பலவற்றைக் கண்டோம். தங்க நகைகளை ரகசியமாக உருக்கி வங்கிகளில் இருப்பு வைப்பது குறித்து இதுவரை முழு தகவலையும் அரசு வெளியிடவில்லை.மேலும் வேற்று மதத்தினர் ஆக்கிரமித்துள்ள கோயில் சொத்துக்களை மீட்க சரியான நடவடிக்கையை அமைச்சரும் அதிகாரிகளும் எடுப்பதில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழக அரசு இந்து கோயில்களை அழிக்க திட்டமிடுகிறது என்ற சந்தேகத்தை மேலும் உறுதிபடுத்துகிறது. அதனை ஆமோதிப்பது போல இருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் நடவடிக்கை. சனாதன இந்து சமயத்தை ஒழிக்க நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட சேகர் பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தமிழக ஆளுநர் தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும் அமைச்சராக இருக்க தகுதியற்ற சேகர் பாபுவை தகுதி நீக்கம் செய்ய சட்ட ரீதியிலான நடவடிக்கையை இந்து முன்னணி மேற்கொள்ளும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x