Published : 03 Sep 2023 08:08 AM
Last Updated : 03 Sep 2023 08:08 AM
சென்னை: இணையதளப் பயன்பாட்டுக்கு அடிமையாவோருக்கு ஏற்படும் ‘இன்டெர்நெட் அடிக்ஷன் டிஸார்டர்’ என்ற நோய் உலகை அச்சுறுத்தி வருவதாகவும், பெற்றோர், இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் மனநல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குடிப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்ற போதைப் பழக்கங்களுக்கு மட்டுமே பெரும்பாலானோர் அடிமையாக இருப்பதாக கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இணையத்துக்கும், சமூக வலைதளங்களுக்கும் கூட ஏராளமானோர் அடிமையாக இருக்கின்றனர்.
தற்போது பலரது வாழ்வின் அங்கமாக இணையப் பயன்பாடு மாறிவிட்டது. ஒருவரை விமர்சிப்பதில் தொடங்கி, காதல், திருமணம் வரை இணையத்துக்கும், சமூக வலைதளத்துக்கும் இளைய சமுதாயத்தினர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சமூக வலைதளங்களிலும், ஆன்லைன் விளையாட்டுகளிலும் இரவு தூக்கத்தை தொலைக்கும் இளைஞர்கள், அதனால் மனஉளைச்சலுக்கும் உள்ளாகி வரு கின்றனர்.
இந்தியாவின் இணையதளம் மற்றும் செல்போனுக்கான சங்கம் (ஐஏஎம்ஏஐ) கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் 75.9 கோடி பேர் இணைய பயனாளர்களாக உள்ளனர். இதில் 36 கோடி பேர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களும், 39.9 கோடி பேர்கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும். இவர்களில் பெரும்பாலானோர் இணையத்தை அணுகுவதற்கு செல்போன்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை 2025-ம் ஆண்டுக்குள் 90 கோடியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது:
தேனாம்பேட்டை கா.லட்சுமி: பள்ளி முடிந்து வரும் குழந்தைகள்தற்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துப் படிப்பதே இல்லை. செல்போனைக் கையில் எடுத்துக்கொண்டு, மணிக்கணக்கில் அமர்ந்துவிடுகின்றனர். அதில் விளையாடிக் கொண்டும், சக மாணவர்களுடன் வாட்ஸ்-அப்பில் அரட்டையடித்துக் கொண்டும் நேரத்தைப் போக்குகின்றனர். இவர்களை கண்டிக்கவும் முடிவதில்லை.
கொரட்டூர் ஸ்ரீதர்: வீட்டில் பிள்ளைகள் எப்போதும் செல்போனுடன்தான் திரிகின்றனர். டிவி பார்ப்பதைக்கூட தவிர்க்கின்றனர். விளையாட வெளியே செல்வதில்லை. நண்பர்களைச் சந்திக்கப் போவதில்லை.வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனர். செல்போனை பிடுங்கினால், பாடத்திட்டம் தெரியாது என்று மல்லுகட்டுகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக இயக்குநர் மீ.மாலையப்பன் கூறும்போது, ‘‘பள்ளிக் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் இணையத்தைப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைதளங்கள் மட்டுமின்றி, ஆபாச தளங்களிலும் இளைய தலைமுறை அதிக நேரத்தைச் செலவிடுகின்றது. அத்தியாவசியமாக இருக்கும் ஒரு சேவை, அளவுக்கு மீறும்போது போதைப்பழக்கமாக மாறுகிறது. இதனால் தங்களது கடமைகளை மறக்கின்றனர். இணையம் இல்லாமல் இருக்க முடியாத நிலைக்குச் சென்றுவிடுகின்றனர்.
அவர்களிடம் இருந்து செல்போனைப் பறிக்கும்போது கடும்கோபத்துக்கு உள்ளாகி, கத்தத்தொடங்குகின்றனர். இவையெல்லாம் இணையப் பயன்பாட்டுக்கு அடிமையாக இருப்பதன் ஒரு நிலையாகும். எனவே, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் கூறும்போது, ‘‘உலகஅளவில் ‘இன்டெர்நெட் அடிக்ஷன்டிஸார்டர்’ (Internet addiction disorder) என்ற நோய் அதிகரித்துவருகிறது. இதில் 10 முதல் 20வயதிலான இளைஞர்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். இணையப் பயன்பாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களின் மூளையில் ஹார்மோன் அழுத்தம் உண்டாகி, மீண்டும் மீண்டும் அதே செயலில் அவர்களை ஈடுபட வைக்கிறது.
தாழ்வு மனப்பான்மை: இதனால் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் கை நடுக்கம், படபடப்பு இவர்களுக்கும் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்படுவோர், மற்றவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் மனநிலைக்கு வந்துவிடுவர். தனிமையை விரும்புவர். மேலும், தாழ்வு மனப்பான்மைக் கொண்டிருப்பர்.
கரோனாவுக்குப் பின் இந்தியாவில் இணையப் பயன்பாட்டுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம்வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றில் இருந்து விடுபட, வீடுகளில் இரவு 9 மணிக்குமேல் இணையத்தை பயன்படுத்துவதை குடும்பமாக குறைத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும் நேரங்களில் செல்போன் உபயோகத்தை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளை வெளிப்புறங்களில் விளையாட ஊக்குவிக்க வேண்டும். மனதுக்கும், உடலுக்கும் உற்சாகத்தை அளிக்கக்கூடிய செயல்களில் கவனத்தை செலுத்த வேண்டும். இதன் மூலம் இணையதளப் பயன்பாட்டை குறைக்கலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT