Published : 02 Sep 2023 11:32 PM
Last Updated : 02 Sep 2023 11:32 PM
மதுரை: வரைபட அனுமதியை மீறி கட்டிடம் கட்டுவோரிடம் மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரியை 5 முதல் 10 மடங்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் சங்கர், சுப்பிரமணியன். இவர்கள் கோச்சடை பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் 2015-ல் 10896.5 சதுர மீட்டர் இடம் வாங்கினர். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட 23.2.2018ல் வரைபட அனுமதி பெற்றனர். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் வரைபட அனுமதி அடிப்படையில் வணிக வளாகம் கட்டப்படவில்லை என்றும், கட்டிடத்தில் விதிமிறல் இருப்பதாகவும் கட்டுமானப் பணியை நிறுத்துமாறு 25.1.2023ல் மதுரை மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். 25.1.2023ல் நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் கட்டிடத்தை சீல் வைக்கவும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
இதை ரத்து செய்யக்கோரி சங்கர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி.பரதசக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: நமது சட்டங்களின் செயல்பாடு வேகமாக இல்லை. இதை சாதகமாக எடுத்துக்கொண்டு மனுதாரரைப் போன்றவர்கள் விதிகளை மீறி கட்டிடங்களை கட்டுகின்றனர். மனுதாரரே வணிக வளாகத்தில் விதிமீறல் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். விதிமீறலை கட்டுமானப் பணியின் போது சரி செய்யாமல் கட்டுமானம் முடிந்து நிலையில் நீதிமன்றத்தில் முதலை கண்ணீர் வடிப்பதை ஏற்க முடியாது.
அறியாமையால் தவறு செய்தவர்களுக்கு சட்டம் வளைந்து கொடுக்கலாம். ஆனால் அரசையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றும் உள்நோக்கத்துடன் வரைபட அனுமதியை மீறி கட்டிடம் கட்டியவர்களுக்கு சட்டம் வளைந்து கொடுக்க முடியாது. மனுதாரர் சட்டத்தை உடைக்க முயன்றுள்ளார். சட்டவிரோத கட்டுமானம், ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் வரைபட அனுமதி மீறி குடியிருப்பு பகுதி உள்பட எந்த கட்டிடம் கட்டப்பட்டாலும் வணிக பயன்பாட்டுக்குரிய மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரியை குறைந்தது 5 மடங்கு முதல் அதிகபட்சம் 10 மடங்கு வரை வசூலிக்கும் வகையில் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம், மாவட்ட நகராட்சி சட்டத்தில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
மின்சாரம், சொத்து வரி, தண்ணீர் வரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் போது விதிமீறலில் ஈடுபடுவதற்கு முன்பு இருமுறை யோசிப்பார்கள்.
வரைபட அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களை முறைப்படுத்தக்கூடாது. வரைபட அனுமதி பெற்று கட்டப்படும் கட்டிடங்களை அஸ்திவார நிலையில் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தி அடுத்தக்கட்ட கட்டுமானத்துக்கு எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும். இவ்வாறு செய்வது ஆரம்ப நிலையில் விதிமீறல்களை தடுக்கும். இதில் சரியாக செயல்படாத அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி விதிமீறல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். விதிமீறல் இருக்கும் கட்டிடங்களில் மின் இணைப்பை துண்டித்து வரைபட அனுமதி அடிப்படையில் குறைபாடுகளை சரிசெய்யும் வரை கட்டிடத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பியதிலும், கட்டிடம் சீல் வைக்கப்பட்டதிலும் தவறு இல்லை. மனுதாரருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்பணத்தை 4 அறக்கட்டளைகளுக்கு மனுதாரர் வழங்க வேண்டும். மனுதாரரின் கட்டிடம் வரைபட அனுமதி அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு சீலை அகற்ற வேண்டும். அதற்கு முன்பு கட்டிடத்தை பயன்படுத்த அனுமதி வழங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT