Published : 02 Sep 2023 06:56 PM
Last Updated : 02 Sep 2023 06:56 PM
ஈரோடு: ஈரோட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பி.பி.அக்ரஹாரம், தர்கா வீதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (45). இவரது மனைவி சராமா (34). இவர்களுக்கு ஒரு மகளும், முகமது அஸ்தக் (13) என்ற மகனும் உள்ளனர். ஜாகிர் உசேன் ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். முகமது அஸ்தக் 8-ம் வகுப்பு படித்து வந்தார். ஜாகிர் உசேன் தங்கி உள்ள வீடு பழமையான வீடாகும். இதன் கீழ் தளத்தில் ஜாகிர் உசேன் குடும்பத்துடன் தங்கி உள்ளார். முதல் தளத்தில் கணவன்- மனைவி என ஒரு குடும்பத்தினர் தங்கி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தாலும் மாலையில் இருந்து இரவு வரை இடியுடன் கூடிய கனத்த மழை பெய்து வருகிறது. இரவு முதல் பரவலாக மழை பெய்து வந்தது. ஜாகிர் உசேன் மழை பெய்ததால் தான் வேலை பார்க்கும் பேக்கரி கடையிலேயே இரவு தங்கிவிட்டார். சாரமா மற்றும் அவரது மகன் முகமது அஸ்தக் ஆகியோர் வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதேபோல் வீட்டின் முதல் தளத்தில் தங்கி இருந்த கணவன் - மனைவி மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு முதல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.15 மணி அளவில் மழை காரணமாக முதல் தளத்திற்கு மேல் உள்ள மொட்டை மாடி பாரம் தாங்காமல் முதல் தளத்தில் விழுந்துள்ளது. இதனால் முதல் தளத்தின் ஒரு பகுதி இடிந்து தரை தளத்தில் விழுந்துள்ளது. அப்போது தரை தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த சாரமா, மற்றும் அவரது மகன் முகமது அஸ்தக் மீது சிமெண்ட் ஸ்லாப் இடிந்து விழுந்து அவர்களை அமுக்கியது. இதில் இடிபாடுகளுக்கு சிக்கிய தாய், மகன் அலறினர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாக்கம் பக்கத்தினர் ஜாகிர் உசேன் வீட்டுக்கு ஓடி வந்தனர். அப்போது தாய் - மகன் இடிபாடுக்குள் சிக்கியிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக கருங்கல்பாளையம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய தாய், மகனை மீட்க முயற்சி செய்தனர். சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு அவர்களை மீட்ட போது சாரமா மற்றும் அவரது மகன் முகமது அஸ்தக் உடல் நசுங்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜாகிர் உசேன் பேக்கரி கடையிலேயே தூங்கியதால் அவர் உயிர் தப்பினார். இதேபோல் முதல் தளத்தில் மற்றொரு அறையில் தூங்கிய கணவன்- மனைவியும் உயிர் தப்பினர்.
ஜாகிர் உசேன் மனைவி, மகன் உடலை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜாகிர் உசேன் தங்கி இருந்த வீடு மிகவும் பழமையானது என்பதால் மழை காரணமாக ஈரம் பொதுங்கி வீட்டின் மேல் கூரை (சிமெண்ட் ஸ்லாப்) இடிந்து விழுந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்- மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT