Published : 02 Dec 2017 08:30 AM
Last Updated : 02 Dec 2017 08:30 AM

ஆக்கிரமிப்புகளால் மூச்சுத் திணறும் ஆற்றங்கரைகள்: வெள்ள பாதிப்புக்கு இலக்காகும் அபாயத்தில் தென் மாவட்டங்கள்

ஆறுகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாலும், குளங்கள் , ஏரிகள் முறையாக தூர்வாராததாலும், தென் மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு இலக்காகின்றன.

கனமழையின்போது சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதப்பதைப்போல், இப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் தாமிரபரணி ஆறு பயணப்படும் பாதைகளில் பெரும்பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. வெள்ள காலங்களில் தண்ணீர் வழிந்தோடும் கரைகளில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகியிருக்கின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போதெல்லாம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும், இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணி மட்டுமின்றி மற்ற இம்மாவட்டத்தில் உள்ள பச்சையாறு, கடனா நதி, கருப்பா நதி போன்ற ஆறுகளின் பாதைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. கருப்பா நதியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் கடையநல்லூர் பகுதியை சூழ்ந்துள்ளது.

ஆற்றுக்குள் தோட்டம்

திருநெல்வேலி மாநகர பகுதிக்கு உட்பட்ட கருப்பந்துறை முதல் வெள்ளக்கோவில் வரை சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு பயணிக்கும் தாமிரபரணியின் இருபக்க கரைகளும் பெருமளவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம், மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை மற்றும் குறுக்குத்துறை பகுதிகளில் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து குடியிருப்புகள் இருக்கின்றன. தனியாரால் வாழை, தென்னை, காய்கறி தோட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன

குறுக்குத்துறை, கருப்பந்துறை, வண்ணார்பேட்டை, வெள்ளக்கோவில், ராஜவல்லிபுரம், பாலாமடை, சீவலப்பேரி, மணப்படைவீடு, திருமலை கொழுந்துபுரம், கீழநத்தம், வல்லநாடு, வசவப்பபுரம் பகுதிகளில் ஆற்றங்கரைகளில் ஏராளமான செங்கல் சூளைகளும் செயல்படுகின்றன. இவற்றுக்காக அனுமதியின்றி மண் அள்ளப்படுகிறது.

செங்கல் சூளைகளுக்கு தேவையான விறகுகளுக்காக ஆற்றங்கரையில் உள்ள மரங்களை வெட்டி அழிப்பதும் நீடிக்கிறது. செங்கல் சூளைகளை அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கனிம வளத்துறையின் அனுமதி பெற வேண்டும். ஆனால் அத்தகைய அனுமதி பெற்று செங்கல் சூளைகள் அமைக்கப்படவில்லை. செங்கல் சூளைகள் அமைப்பதற்கான களிமண், குறுமண், வண்டல் மண் போன்றவை ஆற்றிலேயே எடுக்கப்படுகின்றன.

சீமைக் கருவேல மரங்கள்

ஆற்றங்கரை முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அதிகப்படியாக வளர்ந்துவிட்டன. தாமிரபரணி ஆற்றங்கரையை ஆக்கிரமித்திருக்கும் இந்த மரங்களை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆற்று நீரோட்டம் தடைபட்டு கரையோரங்களில் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துவிடுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் 1,40,216 குடியிருப்புகள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த குடியிருப்புகளில் இருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 180 மெட்ரிக் டன் வரை திடக்கழிவுகள் சேகரமாகின்றன. இதில் பெரும்பாலான கழிவுகள் ஆற்றங்கரையில் கொட்டப்படுகின்றன. சிந்துபூந்துறை, உடையார்பட்டி பகுதிகளுக்கான குப்பை கொட்டும் தளமாக தாமிரபரணி கரை மாற்றப்பட்டிருக்கிறது. இதனாலும் ஆற்று நீரோட்டம் தடைபடுகிறது.

 

 

கடலில் வீணாகிய வெள்ளம்

தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் மழைக் காலங்களில் சுமார் 50 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுக்க போதுமான தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளுக்கு மேல் நிறைவேற்றப்படவில்லை.

வறண்ட பகுதிகளான திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், நாங்குநேரி தாலுகாக்கள், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதிக்காக உருவாக்கப்பட்ட வெள்ள நீர் கால்வாய் திட்டம் 50 சதவீதம் திமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டு, அதன்பின் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீராதாரங்களில் இருந்தும் வெளியேறும் உபரி நீர் தடைபடாமல் வழிந்தோடும் வகையில் கால்வாய்களை அமைத்து, அது ஆற்றுக்கு வந்துசேரும் வகையிலான நீராதார கட்டமைப்புகளை மன்னர் காலங்களிலேயே உருவாக்கியிருந்தனர். அந்த கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதும், பல கால்வாய்கள் தூர்வாரப்படாததும் வெள்ள அபாயத்தை அதிகரிக்க வைத்திருக்கிறது.

குளங்கள் நிரம்பவில்லை

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,221 குளங்கள், 1,297 மானாவாரி குளங்கள் என்று மொத்தமுள்ள 2,518 குளங்களில் 500-க்கும் மேற்பட்ட மானாவாரி குளங்களில் இன்னமும் தண்ணீர் பெருகவில்லை. கால்வரத்து குளங்கள் பலவும் தூர்ந்துப்போயிருந்ததால் பெருமளவு தண்ணீரை சேமிக்க முடியவில்லை. குளங்களில் மடைகள் சீரமைக்கப்படாததால் குளத்துக்கு வரும் தண்ணீர் வெளியேறி தாழ்வான இடங்களில் தேங்கியிருக்கிறது.

குடிமராமத்து திட்டத்தில் பெயரளவுக்கே தூர்வாரும் பணிகள் நடைபெற்றதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டத்தில் நீடித்த வறட்சியின்போது குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களை தயார்படுத்தி வைக்காமல் இருந்ததும் வெள்ள அபாயத்தை அதிகரித்திருப்பதாக விவசாய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் எப்போதுமே மழைக்கு தாக்குப்பிடிக்கும் வகையிலான மேடான நிலை அமைப்புகளை கொண்டது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளநீர் வழிந்தோடும் கட்டமைப்புகளை உருவாக்கி இருந்தனர். ஆனால் அவற்றை பராமரிக்க தவறியதன் விளைவே தற்போதைய வெள்ள பாதிப்பு.

குமரியில் இப்போது தண்ணீர் சூழ்ந்து நிற்கும் பகுதிகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் விவசாய விளை நிலங்களாக இருந்தவை. குறிப்பாக நாகர்கோவில் சுற்றுவட்டார குடியிருப்புகள் இப்போது தண்ணீரில் மிதக்கும் நிலைக்கு சென்றுவிட்டன.

புத்தேரி குளம்

நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பெரிய குளம் நிரம்பியது. குளம் திறக்கப்படாவிட்டால் புத்தேரி ஊருக்கே அபாயம் எனும் நிலையில் குளக்கரையில் உடைப்பு ஏற்படுத்தப்பட்டு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. நீர் திருப்பி விடப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்டுள்ள குடியிருப்புகள் இப்போது மார்பளவு தண்ணீரில் மிதக்கின்றன. இது முழுக்க, முழுக்க விவசாய விளைநிலமாக இருந்தது. ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரால் பிளாட் போடப்பட்ட நிலங்கள் இவை.

சுசீந்திரம்_பறக்கை சாலை வழியிலும் பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளும் முழுக்க, முழுக்க விவசாய நிலங்களாக இருந்தவை. வளர்ச்சி எனும் பெயரில் அனைத்து பகுதிகளிலும் தார் சாலைகளும், அலங்கார தரை ஓடுகளும் போடப்பட்டுள்ளன. இதனால் நிலத்தடியிலும் நீர் செல்ல முடியாத சூழல் எழுந்துள்ளது. இவைகளாலேயே குடியிருப்புகள் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரைகள், குளக்கரைகள், நீர் வழிந்தோடும் ஓடைகள் எல்லாம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இருப்பதாலும் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளத்தின் பிடியிலிருந்து தப்பவில்லை.

வரையறை தேவை

திருநெல்வேலியைச் சேர்ந்த தாமிரபரணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் ந.காஜாமுகைதீன் கூறும்போது, “தாமிரபரணி ஆற்றின் எல்லையை ஆங்கிலேயர் காலத்தில் எழுதப்பட்ட அரசிதழில் உள்ளபடியும், வருவாய்த்துறை ஆவணங்களின்படியும் அளந்து வரையறை செய்ய வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி கரை பாதுகாப்புக்கு நல்ல மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். ஆற்றோரம் படுகை நிலத்தில் வீடுகள் கட்டுவதை தடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் வெள்ள காலங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்வதை தடுக்க முடியும்” என்றார் அவர்.

கட்டுமானம் அதிகரிப்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி.பெரும்படையார் கூறும்போது,

“ ஆற்றங்கரை, குளம் புறம்போக்கு நிலங்களிலும், வெள்ளம் வழிந்தோடும் பகுதிகளிலும் வீடுகளை கட்டி வைத்திருக்கிறார்கள். இதற்கு அரசுத்துறைகளும் அனுமதி அளித்திருக்கின்றன. ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்புகளை தடுக்கவில்லை. ஆற்றங்கரையோரங்களிலும், குளங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தண்ணீர் வழிந்தோடும் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசியல் தலையீடு எந்த வகையிலும் இருக்க கூடாது” என்றார் அவர்.

விளைநிலங்கள் மனையானது

 நாகர்கோவிலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பசுமை சாகுல் கூறும்போது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் எந்த வரைமுறையும் இன்றி கட்டுப்பாடு இல்லாமல் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மக்களுக்கும் இது குறித்த புரிதல் இல்லை. எங்காவது இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் வீடு கட்டுகின்றனர். இது ஒரு தொடக்கம் தான். இனியும் தாமதித்தால் கன்னியாகுமரி கடும் சிக்கல்களை சந்திக்கும். குமரி மாவட்டம் நெல் விவசாயத்தில் கொடி கட்டி பறந்த பகுதி என்பதால் . அதனாலேயே நாஞ்சில் என அழைக்கப்பட்ட பெருமையும் கன்னியாகுமரிக்கு உண்டு. நாஞ்சில் என்ற சொல்லுக்கு கலப்பை என்று பொருள். விவசாய நிலத்தை அழித்து வீட்டுமனைகளாக்கியதன் விளைவே இன்றைய பாதிப்புகள்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x