Published : 02 Sep 2023 07:16 AM
Last Updated : 02 Sep 2023 07:16 AM
சென்னை: மூன்று இந்திய சட்டங்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்வதற்கு தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் - 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் -1973 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் - 1872 ஆகியவற்றின் பெயர்களை பாரதிய நியாய சன்ஹிதா - 2023, பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா - 2023, பாரதிய சாக்ஷயா அதிநயம் - 2023 என்ற பெயர்களில் இந்தியில் பெயர் மாற்றம் செய்யும் வகையிலும், சட்டப் பிரிவுகளை மாற்ற வழிவகை செய்யும் வகையிலும் 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆங்கிலத்தில் உள்ள இந்த மூன்று சட்டங்களின் பெயர்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்வதையும், இதில் உள்ள சட்டப் பிரிவுகளின் வரிசைகளை இஷ்டம்போல மாற்றுவதையும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்க்கிறது. இவ்வாறு இந்திய சட்டங்களின் பெயர்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்வது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
எனவே மத்திய அரசின் இத்தகையச் செயலுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி பாராளுமன்ற நிலைக்குழுவுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். சட்டங்களில் உள்ள சட்டப்பிரிவுகளின் வரிசையை புதிதாக மாற்றியமைத்தால் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் மீண்டும் முதலில் இருந்து சட்டம் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே இந்திபெயர் மாற்றம், சட்டப்பிரிவுகளின் வரிசையை மாற்றும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
அதேநேரம், இந்த சட்டங்களில் காலச்சூழலுக்குத் தகுந்தாற்போல் புதிதாக மேற்கொள்ளப்படும் சட்டத் திருத்தங்களை தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் மனதார வரவேற்கிறது. எனவே இந்த மூன்று சட்டங்களின் பெயர்களை இந்தியில் பெயர் மாற்றம் செய்வதையும், சட்டப்பிரிவுகளின் வரிசைகளை மாற்றுவதையும் மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறோம். மீறி அமல்படுத்தப்பட்டால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வின்போது, பார் கவுன்சில் துணைத் தலைவர் வி.கார்த்திகேயன், செயலர் சி.ராஜாகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சட்டங்களில் உள்ள சட்டப்பிரிவுகளின் வரிசையை புதிதாக மாற்றியமைத்தால் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் மீண்டும் முதலில் இருந்து சட்டம் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT