Published : 02 Sep 2023 07:50 AM
Last Updated : 02 Sep 2023 07:50 AM
சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம். இவரது மகன் சங்கர், மருமகள் மனோலியா. 2019-ல் திருமணமான இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவர் வீட்டார் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்துவதாக மனோலியா போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக சங்கர், எம்எல்ஏ சதாசிவம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சதாசிவம், சங்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சதாசிவம் தரப்பில், தனது மகனும், மருமகளும் கடந்த பிப்ரவரி முதல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தவறான குற்றச்சாட்டில் தங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது காவல் துறை தரப்பில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும், மனுதாரர்கள் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, வரதட்சணைக் கொடுமை வழக்கில் வரும் 4-ம் தேதி காலை சூரமங்கலம் காவல் நிலையத்தில் சதாசிவம் தனது குடும்பத்தாருடன் ஆஜராக உத்தரவிட்டு, முன்ஜாமீன் வழக்கு விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT