Published : 01 Sep 2023 06:44 PM
Last Updated : 01 Sep 2023 06:44 PM

மதுரை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 29 மாதங்களில் 1,958 ‘டீன் ஏஜ்’ பிரசவங்கள்: ஆர்டிஐ தகவலில் அதிர்ச்சி

செல்லூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘டீன் ஏஜ்’ பெண்கள் பிரசவங்களுக்கு வருவது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 29 மாதங்களில் 1,958 ‘டீன் ஏஜ்’ பிரசவங்கள் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிச்சதுக்கு வந்துள்ளது.

கிராமப்புற மக்களுக்கு எந்த நேரத்திலும் அவசர மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கிடும் அடிப்படை மருத்துவ நிலையமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல் படுகின்றன. காய்ச்சல், கை, கால் வலி, சளி மற்றும் பிரசவங்களுக்கு கிராம புற மக்கள், இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களையே நம்பியுள்ளனர். கடந்த காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லாமல் இருந்ததால் பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணி பெண்களை அவர்கள், அருகில் உள்ள தாலுகா மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்கு பரிந்துரை செய்தனர்.

தற்போது சிக்கலான பிரசவங்களை கூட, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மிக எளிமையாக பார்த்து தாயையும், சேயையும் பாதுகாக்கிறார்கள். அதனால், சமீபத்தில் மதுரை மாநகராட்சியில் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மத்திய அரசு, சிறந்த மருத்துவ சிகிச்சைக்கான தேசிய தரச்சான்று வழங்கி கவுரவித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்துக்கு வரும் பெண்களில் 18 வயதிற்கு கீழ் உள்ள டீன் ஏஜ் பெண்கள் அதிகரித்துள்ளதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரங்களை பெற்ற மதுரை கே.கே.நகரை சேர்ந்த சுகாதார சமூக செயற்பாட்டாளர் ஏ.வெரோனிக்கா மேரி கூறுகையில், "18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை திருமணம் செய்வதோ, பாலியல் உறவில் ஈடுபடுத்துவதோ சட்டப்படி குற்றமாகும். இது குறித்து சமூக அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். ஆனால், தற்போது வயது குறைந்த பெண் குழந்தைகள் திருமணம் தாராளமாக நடக்கின்றன. அதனால், டீன் ஏஜ் பிரசவங்களும் அதிகரித்துள்ளன.

மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அரசு சுகாதார பணிகள் துணை இயக்குநரக நிர்வாக கட்டுபாட்டில் 57 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. கடந்த 2021 ஜனவரி முதல் 2023 மே மாதம் வரையிலான 29 மாதங்களில் மட்டும் இந்த 57 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 1,380 டீன் ஏஜ் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. அதிகபட்சமாக பேரையூர் தாலுகாவில் செயல்படும் சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் 58 பிரசவங்களும், அடுத்தபடியாக வலையங்குளம் 57, செக்கானூரணி 53, சாத்தங்குடி 53, டி.புதுப்பட்டி 52 என்ற எண்ணிக்கையில் இளம் வயது பிரசவங்கள் பதிவாகியுள்ளது.

மேலும், இதே காலகட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைங்களில் 578 எண்ணிக்கையிலான இளம் வயது பருவ பிரசவங்கள் பதிவாகியுள்ளன. கிராமப்புறம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டிலும் சேர்த்து மொத்தம் 1,958 எண்ணிக்கையிலான டீன் ஏஜ் பிரசவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கணக்கெடுப்பட்ட எண்ணிக்கை மட்டுமே.

அரசு தாலுகா மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளை ஒப்பிட்டால் பிரசவங்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். "டீன் ஏன்" பிரசவங்கள் அல்லது இளம் வயது பெண்கள் கர்ப்பிணியாக இருப்பது அறியவந்தால் உடனே ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகத்தினர் மாவட்ட குழந்தைகள் நல அலகு, சைல்ட் லைன், காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். ஆனால், சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்துவது கிடையாது. அதனாலே, இந்த இளம் வயது பிரசவங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்றார்.

சமூக நலத்துறை களம் இறங்குமா?: சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது, "மதுரை மாவட்டத்தில் 35 லட்சம் மக்கள் உள்ளனர். ஆண்டிற்கு 46 ஆயிரம் பிரசவங்கள் நடக்கிறது. இதில், கிராம புறங்களை சேர்ந்த விழிப்புணர்வு இல்லாத பெற்றோர்கள் இளம் வயது திருமணங்களை செய்து கொடுப்பதால் இது போல் இளம் வயது பிரவசங்கள் நடக்கிறது. அதை தடுக்க சுகாதாரத் துறையில் குடும்ப நலக்குழு ஒன்று செயல்படுகிறது.

அவர்கள், கல்லூரிகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். சமூக நலத்துறை இந்த விவகாரத்தில் தீவிரமாக களம் இறங்கினால் மட்டுமே இளம் வயது திருமணம், இளம் வயது பிரசவங்களை முற்றிலும் தடுக்க முடியம். எங்களை பொறுத்த வரையில் 19 வயதிற்கு மேல்தான் திருமணம் செய்ய சொல்கிறோம், 21 வயதிற்கு மேல்தான் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் அறிவுரை வழங்கிறோம்." என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x