Published : 01 Sep 2023 02:34 PM
Last Updated : 01 Sep 2023 02:34 PM

ப்ரீ டெண்டரால் நம்பிக்கை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்க மெயின் டெண்டர் எப்போது?

மதுரை: தமிழகத்தில் ஆரம்பத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கான தகுதி அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க ஜூன் 2018-ல் தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது.

மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவித்து 8 ஆண்டுகள் கடந்து, அடிக்கல் நாட்டி நான்கரை ஆண்டுகள் ஆகி உள்ளது. ‘எய்ம்ஸ்’ கட்டுமானம் எப்போது தொடங்கும் என விடை தெரியாமல் இருந்த மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு சிறிய ஆறுதல் தரும் வகையில், டெண்டருக்கு முந்தைய நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப் பீடான ரூ.1,977.8 கோடியில், 82 சதவீதமான ரூ.1,627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜைய்கா நிறுவனமும், 18 சதவீதத் தொகையான ரூ.350.1 கோடியை மத்திய அரசு பட்ஜெடடில் வழங்குகிறது. இதுவரை சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகளுக்காக மட்டும் ரூ.12.35 கோடி தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது மெயின் டெண்டருக்கு முந்தைய ‘ப்ரீ’ (PRE) டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதால் மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. மெயின் டெண்டர் அறிவித்தால் கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்து கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மதுரை எய்ம்ஸ் குறித்து தொடர்ந்து ஆர்.டி.ஐ-யில் தகவல் பெற்று வந்த சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா கூறுகையில், "தமிழகத்துக்குப் பின் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு திறப்பு விழா கண்டு வருகிறது. ஆனால், மதுரை எய்ம்ஸ்க்கு மட்டுமே காரணங்கள் கூறப்பட்டு காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.

நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து என்று காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் தற்போது "ப்ரீ" டெண்டர் வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த டெண்டர், மதுரை "எய்ம்ஸ்" கட்டுமானத்தை கட்டுவதற்கு மெயின் டெண்டருக்கு முந்தைய மற்றும் இறுதி டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் தகுதியை தேர்வு செய்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மெயின் டெண்டர் அக்டோபரில் வர வாய்ப்புள்ளது. இந்த டெண்டர் வந்த பிறகு "எய்ம்ஸ்" கட்டுமானத்தை கட்டும் கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்ய முடியும். அதை இறுதி செய்வதற்கு வரும் டிசம்பர் வரை ஆகலாம். கட்டிடங்கள் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு வரும் ஜனவரி 2024 ல் வாய்ப்புள்ளது.

எனவே, உடனடியாக மெயின் டெண்டரை வெளியிட்டு பிரதான கட்டிடங்களை கட்டும் கட்டுமான நிறுவனத்தை இறுதி செய்ய வேண்டும். மேலும் காலதாமதம் செய்யாமலும் காரணம் சொல்லாமலும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x