Published : 01 Sep 2023 06:15 AM
Last Updated : 01 Sep 2023 06:15 AM

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் உயர்மட்ட மின்சாதனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அதாவது, சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை 3 மணி நேரத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

சென்னையில், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்னை சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதிகாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்குவதால், பயணிகள் நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்ய முடிகிறது. இந்த ரயில்களில் தினசரி 2.30 லட்சம் முதல் 2.80 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகம் செல்வோர் என பல்வேறு தரப்பினர் பயணம் செய்கின்றனர். குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் உயர்நிலை மின்சாதனத்தில் நேற்று காலை 7.40 மணி அளவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், விம்கோ நகர் பணிமனை – விமான நிலைய வழித்தடத்தில் நேரடி மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

விம்கோ நகர் மெட்ரோ நிலையத்தில் இருந்து விமானநிலையம் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் தற்காலிகமாக சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டன. அதேநேரத்தில், சென்ட்ரல் - பரங்கிமலை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.

இதற்கிடையில், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் உயர்நிலை மின்சாதனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள், பணியாளர்கள் ஈடுபட்டு தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். இதையடுத்து 3 மணி நேர பாதிப்புக்குப் பிறகு காலை 11 மணியளவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விம்கோ நகரில் இருந்து சென்ட்ரல், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, விமான நிலையம் நேரடியாக செல்ல வேண்டிய பயணிகள் அவதிப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x