Published : 01 Sep 2023 08:05 AM
Last Updated : 01 Sep 2023 08:05 AM

பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் பக்த கோலாகலனின் திருவடி அடைந்தார்

திருச்சி: ஆன்மிக சொற்பொழிவுகள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களைக் கவர்ந்த ஸ்ரீகிருஷ்ண பிரேமி சுவாமிகள் (89) ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அதிகாலை பக்த கோலாகலனின் திருவடி அடைந்தார்.

ஸ்ரீ ஸ்ரீ அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ண பிரேமி சுவாமிகள் 1934-ம் ஆண்டு கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள செங்கனூர் கிராமத்தில் வெங்கட்ராம சாஸ்திரிகள்-பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு பக்திப் பாடல்கள் பாடுவது, பக்தி சொற்பொழிவு நிகழ்த்துவது ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார். பின்னர், ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றியதுடன், பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். வேத விஞ்ஞானம், வேதங்களின் சாரம், திருப்பாவை மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ சம்ஹிதை உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

'பாகவதம்', 'ராமாயணம்' மற்றும் 'பகவத் கீதை' ஆகியவற்றில் இவர் நிகழ்த்தும் உபன்யாசங்களைக் கேட்டு ரசிக்க உலகமெங்கும் பக்தர்கள் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பரனூர் கிராமத்தில் 1960-களின் முற்பகுதியில் வேதபாடசாலை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி கிருஷ்ணா மாதுரி, மகன்கள் ஹரி, ரங்கன், மகள் சுபத்ரா ஆகியோர் உள்ளனர்.

இவரது மறைவுச் செய்தி கேட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சீடர்கள் குவிந்தனர். ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அவரது இறுதிச் சடங்குகள் நேற்று மாலை நடைபெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x