Published : 01 Sep 2023 07:23 AM
Last Updated : 01 Sep 2023 07:23 AM
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்து அஜய் சிங் ‘பாரதிய ஜனதா கட்சியின் புதிய சிற்பி' என்ற நூலை எழுதியுள்ளார். இதை ‘இந்து
தமிழ் திசை' நாளிதழின் ஓர் அங்கமான ‘தமிழ் திசை பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது.
இந்நூல் குறித்து, நூலாசிரியர் அஜய் சிங் கூறும்போது “இதுவரை பிரதமராக இருந்த எவரும் இப்படி கட்சியின் அடிமட்டத் தொண்டர் நிலையிலிருந்து தலைமைப் பதவிக்கு உயர்ந்ததில்லை. அது வெறும் அதிர்ஷ்டத்தின் மூலமோ, குடிப்பிறப்பின் மூலமோ அவருக்கு வாய்த்துவிடவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 3 முறை குஜராத் முதல்வராக பதவி வகித்தது, நல்வாழ்வு திட்டங்களை அரசின் நிதியாதாரத்துக்கு சேதம் இல்லாமல் நிறைவேற்றியது, ஊழலுக்கு இடம்தராமல் நிர்வகித்தது, திட்டமிட்டு செயல்களைச் செய்தது, கட்சியையும் அரசு அதிகார இயந்திரத்தையும் ஒருங்கிணைத்தது என்று மோடியின் நிர்வாகத் திறமை அளப்பரியது.
2014-ல் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைமையை ஏற்று பிரதமர் பதவிக்கான வேட்பாளராகி, தேர்தல் உத்திகளை வகுத்து வெற்றி பெற்றது என்று அனைத்துமே நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. மோடியின் அரசியல் வாழ்க்கையைக் கூட நிறை, குறைகளை விவரித்து விமர்சிக்காமல், வாசகர்களுக்கு அவருடைய ஆற்றலை மட்டும்
உணர வைக்கும் வகையில் பிரதமர் மோடி குறித்து இந்த நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் விளம்பரப் பிரிவின் பொதுமேலாளர் சிவக்குமார், மண்டல மேலாளர் வடிவேல் ஆகியோர், சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து இந்த நூலைவழங்கினர். அப்போது கட்சியின் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உடனிருந்தார்.
இந்த நூலைப் பெற்றுக் கொண்ட அண்ணாமலை, ‘இந்து தமிழ் திசை' பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டமைக்காக பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்நூல் ரூ.350-க்கு கிடைக்கிறது. இந்நூலைப் பெற 7401296562, 7401329402 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம். store.hindutamil.in/publications என்ற இணையதளம் வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT