Published : 01 Sep 2023 07:06 AM
Last Updated : 01 Sep 2023 07:06 AM

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து மலை பகுதிகளுக்கு விரிவாக்கம் குறித்து ஆய்வு: போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவு

சென்னை: பெண்களுக்கான கட்டணமில்லாபேருந்துப் பயணத் திட்டத்தை மலைப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என துறை சார் அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியவை: பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டமான விடியல் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதை மலைப் பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் பயனடையுமாறு விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதையும், பழைய பேருந்துகளை புதுப்பித்து இயக்கும் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி, அனைத்துப் பேருந்துகளையும் தவறாது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையகங்கள், சூரிய மின் தகடுகள் நிறுவுதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள், கைரேகை தொழில்நுட்ப வருகைப் பதிவேடு ஏற்படுத்துதல் போன்றவற்றை துரிதப்படுத்த வேண்டும். விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். உதவி எண்களில் பெறப்படும் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். மழைக் காலத்தில் இடர்பாடின்றிப் பேருந்துகளில் பொது
மக்கள் பயணிப்பதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x