Published : 01 Sep 2023 07:00 AM
Last Updated : 01 Sep 2023 07:00 AM

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமனம் குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு மீண்டும் பரிந்துரை

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்கள் நியமனம் குறித்த ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பரிந்துரையை மீண்டும் தமிழக அரசு அனுப்பியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசுத் துறைகளுக்கு புதிதாக 55 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று
அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை செயல்படுத்தப்பட வேண்டிய நிலையில், கடந்த பல மாதங்களாக டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்றி உள்ளது. இதனால், தேர்வுகள் நடத்தப்பட்டாலும் நேர்காணல் உள்ளிட்டவற்றை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆளுநர் ஒப்புதலுக்கு பரிந்துரை: இந்தச் சூழலில், கடந்த ஜூன் 30-ம் தேதி தமிழக டிஜிபியாக இருந்த செ.சைலேந்திரபாபு ஓய்வு பெற்றார். இவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதை தொடர்ந்து, தலைவராக சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்கள் 8 பேரை புதிதாக நியமித்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு பரிந்துரைத்தது.

ஆனால், ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையில் மோதல் நீடிக்கும் நிலையில், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 8 உறுப்பினர் தொடர்பான கோப்புகள் நிலுவையில் இருந்தன. டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படி நியமித்து வரும் நிலையில், தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட கோப்பினை சமீபத்தில் ஆளுநர் அரசுக்கே திருப்பியனுப்பினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஆளுநர் அனுப்பிய கோப்பில், சில சந்தேகங்களை எழுப்பி, அதற்கான விளக்கங்களையும் அவர் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இப்பதவிகளுக்கான விண்ணப்பம் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரம், பெறப்பட்ட விண்ணப்பங்கள், தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட வர்களின் விவரங்கள், பரிந்துரைக்கப்பட்டவர்களில் இறுதி செய்யப்பட்டது எப்படி? நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது போன்ற விவரங்களை கோரியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டதில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றப்பட்டுள்ளதாகவும், நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட தகவல்களுடன் தமிழக அரசின் சார்பில் கோப்புகள் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் குறித்து தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட கோப்பினை சமீபத்தில் ஆளுநர் அரசுக்கே திருப்பியனுப்பினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x