Published : 01 Sep 2023 05:54 AM
Last Updated : 01 Sep 2023 05:54 AM
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற தலைப்பில் பல மொழிகளில் குரல் பதிவை வெளியிடுகிறார்.
‘இண்டியா’ கூட்டணியின் சார்பில் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் 3- வது கூட்டத்தில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கின்றனர். ஏற்கெனவே, மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்தகட்டமாக நாடு முழுவதும் தனது குரலை ஒலிக்கச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அதன் அடிப்படையில், ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற தலைப்பில், குரல் பதிவு மூலம் பேசுகிறார். இது பல மொழிகளில் ஒலிபரப்பாக உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவு: கடந்த சில மாதங்களாக `உங்களில் ஒருவன்' என்ற தலைப்பின் மூலம் பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். திமுக 75-வது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி. அண்ணா, கருணாநிதி என இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை
ஏற்படுத்திய உடன் பிறப்புகள் நாங்கள். தற்போது இந்தியாவுக்காகப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
2024-ல் முடியப்போகும் பாஜக ஆட்சி இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைத்தது, எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்பும் இந்தியா எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் `ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' என்ற தலைப்பில் நாட்டு மக்களிடம் ஆடியோ வடிவில்பேச உள்ளேன். தெற்கில் இருந்துவரும் இந்த குரலுக்காக காத்திருங்கள். இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: பாஜக ஆட்சியின் அலங்கோலங்களை அம்பலப்படுத்தியும், பன்முகத்தன்மை கொண்ட வலுவான மாநிலங்கள்கொண்ட, மதச்சார்பற்ற இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் குரல் பதிவு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற தலைப்பில் வெளியாக உள்ளது. மேலும், இந்த தொடர் ஆங்கிலத்திலும், இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டும் வெளியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment