Published : 31 Aug 2023 05:31 PM
Last Updated : 31 Aug 2023 05:31 PM

93 மாத அகவிலைப்படி நிலுவை கோரி மதுரையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தர்ணா

மதுரையில் இன்று அரசு போக்குவரத்து கழக சிஐடியு  ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்றோர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 93 மாத அகவிலைப்படி நிலுவைகளை வழங்கக் கோரி, மதுரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் இன்று அரசு போக்குவரத்து கழக சிஐடியு ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 93 மாத அகவிலைப்படி நிலுவைகளை வழங்கவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்கு அச்சங்கத்தின் தலைவர் எஸ்.அழகர் தலைமை வகித்தார். பொருளாளர் எஸ்.ரவி வரவேற்றார். துணைப் பொதுச்செயலாளர் கே.நாகரத்தினம் முன்னிலை வகித்தார்.

மேலும், 01.12.2022 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் தாமதமின்றி வழங்க வேண்டும். 5 சதவீத கட்டுப்பாட்டை நீக்கி வாரிசு வேலை, இஆர்பிஎஸ் நிலுவைத்தொகை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். பணியிலுள்ள தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ஒப்பந்தப்படி அமல்படுத்த வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தை காலதாமதமின்றி துவங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனை வலியுறுத்தி, அச்சங்கப் பொதுச்செயலாளர் ஆர்.வாசுதேவன், ஓய்வுபெற்றோர் (விரைவு போக்குவரத்து) நல அமைப்பு செயலாளர் ஆர்.நாகராஜன், அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க தலைவர் பி.எம்.அழகர்சாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ரா.லெனின், சிஐடியு சம்மேளன உதவி தலைவர் வீ.பிச்சை, சிஐடியு மாவட்ட நிர்வாகி ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். முடிவில், துணைப் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். இதில், சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x