Published : 31 Aug 2023 04:00 PM
Last Updated : 31 Aug 2023 04:00 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிகுப்பம் கிராமத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக வருகை தந்தார். தொடர்ந்து நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெற்றோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் நாச்சிக்குப்பம். நடிகர் ரஜினிகாந்தின் மூதாதையர்கள், பெற்றோர் இக்கிராமத்தில் வாழ்ந்துள்ளனர். இன்றைக்கும் ரஜினியின் உறவினர்கள், இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பெற்றோர்கள் ரானோஜி ராவ், ராம்பாய் ஆகியோருக்கு நினைவிடம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதற்கு தனது அண்ணன் மூலம் அப்போதே அடிக்கல் நாட்டினார். நிலத்தைச் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டது. ஆனால் எவ்வித பணிகளும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவரது ரசிகர்கள் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை, இவ்விடத்தில் நடத்தி வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக நாச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்தை ரஜினியின் அண்ணன் நேரடியாக பராமரித்து வருகிறார். தற்போது, இங்கு ரஜினியின் பெற்றோர் ரானோஜிராவ் - ராம்பாய் சிலைகளுடன் நினைவகம் கட்டப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த், வடமாநிலங்களில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பினார். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனது சகோதார் சத்தியநாராயண ராவ் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பூர்விக கிராமமான நாச்சிக்குப்பத்துக்கு, தனது சகோதார் சத்தியநாராயண ராவுடன் வருகை தந்தார். மதியம் 12 மணியளவில், நாச்சிக்குப்பத்திற்கு வந்தவர், நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெற்றோர் ரானோஜிராவ் - ராம்பாய் சிலைகளுக்கும், சுவாமி சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தோட்டத்தை சுற்றி பார்த்த ரஜினிகாந்த், அங்கிருந்த தனது உறவினர்கள், தோட்டத்தில் பணிபுரிபவர்களிடம் நலம் விசாரித்தார். 15 நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த ரஜினிகாந்த், கார் மூலம் கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
ரஜினிகாந்த் வந்துள்ளதை அறிந்து அங்கு வந்த உள்ளூர் மக்கள், அவர் சென்றுவிட்டதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண் ராவ் கூறும்போது, “நீண்ட நாட்களாக நாச்சிக்குப்பம் வர வேண்டும் என ரஜினிகாந்த் திட்டமிட்டு இருந்தார். பெங்களூருக்கு வந்தவர், எங்கள் பூர்விக கிராமமான நாச்சிக்குப்பத்துக்கு வந்து, பெற்றோர் நினைவகத்தில் மரியதை செலுத்திவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் அவர் நாச்சிக்குப்பம் வருவார். இங்கு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் எனவும், அதற்கான ஆலோசனைகள் செய்து வருகிறார்” என்றார். இந்நிகழ்வின் போது ஓசூர் ரஜினி ரசிகர் மன்ற மாநகர செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT