Published : 31 Aug 2023 03:28 PM
Last Updated : 31 Aug 2023 03:28 PM

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு: ஆளுநர் ரவியிடம் உரிய விளக்கத்துடன் அரசு மீண்டும் பரிந்துரை

சைலேந்திரபாபு (இடது) , ஆளுநர் ஆர்.என்.ரவி (வலது)

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க மீண்டும் பரிந்துரைத்தும், அதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு மீண்டும் கோப்புகளை அனுப்பியுள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகால அட்டவணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வுகள், நேர்காணல்கள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில், தமிழக அரசு துறைகளுக்கு புதிதாக 55 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பும் டிஎன்பிஎஸ்சி மூலமாகத்தான் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால், கடந்த பல மாதங்களாக டிஎன்பிஎஸ்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இதனால், தேர்வுகள் நடத்தப்பட்டாலும் நேர்காணல் உள்ளிட்டவற்றை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தமிழக தலைமை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு கடந்த ஜூன்30-ம் தேதி ஓய்வு பெற்றார். இவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவையும், உறுப்பினர்களாக 8 பேரையும் புதிதாக நியமித்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபு மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை, அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். இப்பதவிகளுக்கான விண்ணப்பம் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரம், பெறப்பட்ட விண்ணப்பங்கள், தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரங்கள், பரிந்துரை பட்டியலை இறுதி செய்தது எப்படி? நியமனம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விவரங்களை ஆளுநர் கோரியதாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் கேட்ட விளக்கங்களை கோப்பாக தயாரித்து தமிழக அரசு மீண்டும் திரும்ப அனுப்பியுள்ளது. அதில், இந்தப் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் யார்? எதன் அடிப்படையில் சைலேந்திர பாபு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர் விண்ணப்பங்கள் தொடர்பாக செய்திதாள்களில் விளம்பரங்கள் எதுவும் செய்ய வேண்டியது இல்லை எனவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x