Published : 31 Aug 2023 05:09 PM
Last Updated : 31 Aug 2023 05:09 PM

வாரிசுகளுக்காக சிதைக்கப்படும் இளைஞர்கள் கனவு: கேள்விக்குறியானது காவலர் பணி தேர்வின் நம்பகத்தன்மை

திருவண்ணாமலை: காவல் துறை பணியில் வாரிசுகளை சேர்க்க நடைபெறும் முறைகேடுகளால், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வில் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகி உள்ளது.

காவலர் சீருடை பணி என்பது ‘தலை நிமிர்ந்து’ செய்யக்கூடிய பணியாகும். சமுதாயத்தில் மதிப்புமிக்க பணிகளில், சீருடை பணியானது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் ‘கனவாக’ காவலர் பணி திகழ்கிறது. இதனால், காவல் துறை பணியில் இணைய இளைஞர்கள் திரள்கின்றனர். இவர்களில் கிராமப்புற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

முதல்நிலை காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பணியில் இணைய, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இதற்காக, முதற்கட்டமாக எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெற்றதும், உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர், மருத்துவப் பரிசோதனை மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தனை தடைகளை (தேர்வுகள்) கடந்துதான், காவல்துறை பணியில் இணைய முடியும்.

இந்நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் காவல்துறை பணியில் உள்ளவர்களின் வாரிசுகளுக்கு, துறையில் உள்ள ‘கருப்பு ஆடுகள்’ உதவி செய்வதால் தேர்வு மீதான நன்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. காவல் துறையில் வாரிசுகளை பணியில் சேர்க்க, முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதனால், காவலர் பணியை உயிர் மூச்சாக நினைத்து படித்தும், பயிற்சி பெற்றும் தேர்வில் பங்கேற்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் கனவு சிதைக்கப்படுகிறது. பணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய இளைஞரின் இடம், அப்பட்டமாக பறிக்கப்படுகிறது.

இதற்கு உதாரணமாக, திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள மகளிர் கல்லூரியில் கடந்த 26-ம் தேதி நடைபெற்ற உதவி காவல் ஆய்வாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் ஒருவரின் மனைவி லாவண்யா சிக்கியதை கூறலாம். கர்ப்பிணி எனக் கூறி, வினா மற்றும் விடைத்தாளுடன் கழிப்பறைக்கு சென்று கைபேசி பயன்படுத்தி விடைகளை பூர்த்தி செய்துள்ளார். இதற்கு, காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளே உதவி செய்துள்ளன. தேர்வு அறை மற்றும் கழிப்பறை செல்லும் வழித்தடம் ஆகியவற்றை, தேர்வுக்கு முதல்நாளே, இப்பெண்ணுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் தேர்வில் திறமைசாலிகள் புறக்கணிக்கப்பட்டு, வாரிசுகள் இடம் பிடிப்பதை முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மகன் விஷ்ணு விஷால் நடித்த ‘குள்ளநரி கூட்டம்’ படத்தில் தெளிவாக கூறப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தில், காவல்துறை பணியில் உள்ளவர்கள் செய்யும் முறைகேடு வெட்ட வெளிச்சம் போட்டு காண்பிக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் ‘கரு’தான், ஒவ்வொரு முறையும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் எதிரொலிக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேலும் அவர்கள் கூறும்போது, “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் முதல்நிலை மற்றும் உதவி காவல் ஆய்வாளர் தேர்வை, முன்னின்று நடத்துவது காவல்துறையினர் தான். இதனால், காவல்துறை பணியில் உள்ளவர்களின் வாரிசுகள் பங்கேற்கும்போது, முறைகேடுகளில் ஈடுபடுவது எளிதாகிவிடுகிறது.

அதேநேரத்தில், நேர்மையாக தேர்வை எதிர்கொள்ளும் காவல் துறையினரின் வாரிசுகளும் உள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடுபவர்களால், அவர்களது உழைப்புக்கு களங்கம் ஏற்படுகிறது. முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் மீது தயவு தாட்சயமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்வுகளில், முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, கடுமையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, காவலர் தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x