Published : 31 Aug 2023 05:03 PM
Last Updated : 31 Aug 2023 05:03 PM
வேலூர்: குடியாத்தம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பசுமை பூங்காவுடன் கூடிய அதி நவீன எரிவாயு தகன மேடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளை களைவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உட்கட்டமைப்பில் உள்ள இடைவெளியை நிரப்பும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகள் மற்றும் ஏற்கெனவே இருக்கும் பின்தங்கிய பகுதிகள் அல்லது குடிசை பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம் பாட்டுத் திட்டம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் உள்ளாட்சிஅமைப்புகளில் மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்கு குடிநீர் இணைப்புகள், சுகாதார வசதிகள், உள்புறச் சாலைகள் அமைத்தல், தெரு விளக்கு வசதிகள், மயானங்கள் மற்றும் இதர சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். உள்ளாட்சிகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யும் இந்த திட்டத்துக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டால் மக்களுக்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நகராட்சியாக உள்ள குடியாத்தத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அதி நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேகமாக வளர்ந்து வரும் குடியாத்தம் நகரில் சுண்ணாம்புப்பேட்டை பகுதியில் உள்ள கவுன்டன்யா ஆற்றின் கரையோரம் மயானம் உள்ளது.
இங்கு, போதுமான இடவசதி இல்லாததால் நவீன வசதிகளுடன் கூடிய நவீன எரிவாயு தகனமேடை கலைஞர் மேம்பாட்டு திட்டத்தில் தொடங்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் ரூ.2 கோடி மதிப்பில் பசுமை பூங்காவுடன் கூடியதாக தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னோடி திட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையில் நவீன எரிவாயு தகன மேடையா? அல்லது பூங்காவா? என ஆச்சர்யப்படும் அளவுக்கு தயாராகியுள்ளது.
கவுன்டன்யா ஆற்றின் கரையோரத்தில் சுமார் 25 ஆயிரம் சதுரடி பரப்பளவில் உள்ள நவீன தகன மேடை கட்டிடத்தை சுற்றியும் சிமென்ட் இருக்கைகள், செடிகள், வன விலங்குகளின் பொம்மைகள் என பூங்காவுக்கு உரிய அத்தனை வசதிகளும் அமைத்துள்ளனர். பெருநகர பூங்காக்களைப் போல் உள்ள நவீன எரிவாயு தகன மேடை கட்டிடம் காண்போரை ஆச்சர்யப்படும் அளவுக்கு கட்டி முடித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து செடிகளையும் நாகர்கோயில் மாவட்டத்தில் இருந்து வன விலங்கு பொம்மைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நவீன எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது மனிதர்களின் இறுதி காலத்தின் துக்க நிகழ்வில் பங்கேற்கும் உறவினர்களுக்கு சற்று மன நிம்மதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து, குடியாத்தம் நகராட்சி நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தமிழ்நாட்டிலேயே முன்மாதிரி திட்டமாக குடியாத்தம் நகராட்சியில் ரூ.2 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய பூங்காவுக்கு வந்த உணர்வு இருக்கும் வகையில் பார்த்து, பார்த்து கட்டியுள்ளோம். ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்பவர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையில் குடியாத்தம் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. முதல்வர் கையால் இதனை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT