Last Updated : 31 Aug, 2023 02:30 PM

 

Published : 31 Aug 2023 02:30 PM
Last Updated : 31 Aug 2023 02:30 PM

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 50+ தொழில் அமைப்பினர் ஆயத்தம்

கோவையில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள்.

கோவை: கடந்த 2012-ம் ஆண்டு மின்தடை பிரச்சினைக்கு எதிராக கோவையில் அனைத்து தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தின.

இந்த நிகழ்வு நடைபெற்று தற்போது பத்தாண்டுகளை கடந்துள்ள நிலையில், மின்கட்டண உயர்வால் தொழில்கள் முடங்கியுள்ளதாக கூறி மீண்டும் பல்வேறு தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றன.

தொழில் நகரான கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் ஜவுளி, ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், பம்ப்செட், கிரைண்டர், பொறியியல் பொருட்கள், வார்ப்படம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ் பெற்று விளங்குகின்றன.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் இவ்விரு மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் அமல் படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு அனைத்து வகை தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிக கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் விரைவில் அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ் உள்ளிட்டோர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறியதாவது: கரோனா தொற்று பரவல் தொழில்துறையில் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீண்டு வர இரண்டாண்டுகளுக்கு மேல் தொழில்முனைவோர் போராடினர்.

அதை தொடர்ந்து மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி சார்ந்த பிரச்சினைகள் பாதிப்புகளை ஏற்படுத்தின. அவற்றை எதிர்த்து போராடி வந்த நிலையில், தமிழக அரசு மின்கட்டண உயர்வை அமல்படுத்தியது. இந்நடவடிக்கை தொழில்முனைவோருக்கு தாங்க முடியாத பாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்டிசிடி 11 1பி நுகர்வோருக்கு நிலை கட்டணம் ரூ.35-லிருந்து ரூ.153-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 11 மாதங்களாக குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், அமைச்சர்களை நேரில் சந்தித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தொழில்முனைவோர் ஒன்றிணைந்து அரசின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பு’ தொடங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பதவி மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும். மின் கட்டண உயர்வுக்கு முன் கோவையில் நடத்தப்பட்ட குறைகேட்பு கூட்டத்தில் எதிர்ப்பை தெரிவித்தோம். இருப்பினும் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மின்தடை பிரச்சினையை கண்டித்து அனைத்து தொழில் அமைப்பினரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பத்தாண்டுகளுக்கு பின் அதே போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த முறை மின்கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்த தொழில் அமைப்பினர் ஆயத்தமாகி வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் கூட்டு நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோவையில் ஏற்கெனவே டாக்ட், ஆர்டிஎப், காஸ்மாபேன், கொசிமா, டான்சியா, தமிழ்நாடு கிரில் தயாரிப்பாளர்கள் சங்கம், கம்ப்ரசஸர் தயாரிப்பாளர்கள் நலச்சங்கம், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்பேட்டை தொழில் முனைவோர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் கூட்டம் நடத்தியுள்ள நிலையில்,

நேற்று முன்தினம் கோவையில் கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை உள்ளிட்ட பல்வேறு பெரிய தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பெரும்பாலான தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் கூறியதாவது: ஒருபுறம் பொருளாதாரத்தில் தமிழகம் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்வர் கூறி வருகிறார். ஆனால் மறுபுறம் குறு, சிறு தொழில் முனைவோர் தோளில் ஏற்றப்படும் பாரம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கரோனா பரவலுக்கு பின் திமுக அரசு பொறுப்பேற்ற போது தொழில்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு வர உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் மின் கட்டணத்தை அனைத்து வகையிலும் அரசு உயர்த்தியது.

இது ஏற்புடையதல்ல என பல முறை பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அரசு கண்டுகொள்ளவில்லை. வேறு வழியில்லை என்ற நிலை காரணமாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தொழில் முனைவோர் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x