Published : 31 Aug 2023 09:29 AM
Last Updated : 31 Aug 2023 09:29 AM

”தெற்கிலிருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள்” - ஆடியோ சீரிஸ் குறித்து அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் ஆடியோ சீரிஸ் வெளியிடப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகநீதி, மதச்சார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சிக் கருத்தியல் ஆகியவை உள்ளதே இணையற்ற இந்தியா.
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல் உள்ளிட்டவையெல்லாம், பலவகைப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவை உருக்குலைக்கும் நச்சுக் கருத்துகள்.

குமரி முதல் இமயம் வரையிலான பரந்து விரிந்த இந்திய நாட்டைக் காப்பாற்றும் கடமை நம் அனைவர் கைகளிலும் இருக்கிறது என்ற நோக்கோடு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் அலங்கோலங்களை அம்பலப்படுத்தியும், பன்முகத்தன்மை கொண்ட, வலுவான மாநிலங்கள் கொண்ட, மதச்சார்பற்ற இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்தும், கழகத் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், Podcast (குரல்பதிவுத் தொடர்) வடிவில், Speaking for India என்ற தலைப்பில் பேச இருக்கிறார். இத்தொடர் ஆங்கிலத்திலும், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பேசிய ஆடியோ ஒன்றும் அந்த அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின், "செக்.. 1,2,3.. ஆரம்பிக்கலாமா? கடந்த சில மாதமாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவத்தில் பல விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.

திமுகவின் 75-வது ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி. அண்ணா, கலைஞர் என்று இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால் உருவாக்கப்பட்ட உடன் பிறப்புகள் நாங்கள்.

இப்பொழுது இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். 2024ஆம் முடியப் போற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறது; எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகின்ற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரியஸில் பேசப் போகிறேன்.

அதற்கு 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' என்ற தலைப்பு வச்சுக்கலாமா? தெற்கிலிருந்து வரும் இந்தக் குரலுக்காகக் காத்திருங்கள்" என்று பேசியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x